google-site-verification: googlef09a89005d7755ea.html தேவாரம்

தேவாரம்


தேவாரம் – குறிப்பு வரைக

தேவாரம் என்பது சைவ சமயத்தின் மிக முக்கியமான பக்தி இலக்கியமாகும்; ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூன்று நாயன்மார்களால் சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்ட பதிகங்களின் தொகுப்பான இது, பக்தி இலக்கியத்தின் முதன்மையாகவும், இசைத்தமிழின் இனிமையாகவும் திகழ்கிறது; ஒவ்வொரு பதிகமும் குறிப்பிட்ட சிவத்தலங்களின் பெருமையை வர்ணிப்பதுடன், சிறந்த தமிழ்ச் சொற்களால் ஆன இதன் சந்தமும், எதுகையும், மோனையும் தமிழ் மொழியின் அழகை வெளிப்படுத்துகின்றன; சைவ சித்தாந்தத்தின் தத்துவக் கருத்துக்களை எளிமையாக விளக்கும் இப்பாடல்கள், அக்கால சமுதாய நிலையையும் பிரதிபலிக்கின்றன; சிவ ஆலயங்களில் இன்றளவும் வழிபாட்டின் முக்கிய அங்கமாகப் பாடப்படும் தேவாரம், பன்முகத்தன்மை கொண்டு சைவ சமயத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக விளங்குகிறது.

தேவாரம் பாடிய மூவர்

சைவ சமயத்தின் இலக்கியமான பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கின்றனர்.

1. திருஞானசம்பந்தர் – 1,2,3ஆம் திருமுறை

2. திருநாவுக்கரசர் – 4,5,6ஆம் திருமுறை

3. சுந்தரர் – 7ஆம் திருமுறை

ஆகியோரை தேவாரம் பாடிய மூவர் என்று அழைக்கின்றனர்

1.திருஞானசம்பந்தர் குறிப்பு

சோழ நாட்டில் சீகாழியில் தோன்றியவர், நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர். அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர்.  இவர் ஆளுடைய பிள்ளையார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் முன்பகுதியினர் இவர் பதினாறு ஆண்டுகள் இம்மண்ணுலகில் வாழ்ந்தார்.  ஆதிசங்கரர் சம்பந்தரைத் ‘திராவிட சிசு’ என்று குறிப்பிடுகிறார். சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணமான பெரிய புராணத்தில் ஞானசம்பந்தரின் வரலாற்றை விரிவாக, ஏறத்தாழ நூலின் சரிபாதி அளவாகப் பாடியுள்ளார். 

சம்பந்தர் பாடிய பதிகங்கள் மொத்தம் பதினாறாயிரம் என்று நம்பியாண்டார் நம்பி  குறிப்பிட்டுள்ளார்.  எனினும் திருமுறை கண்ட காலத்தில் கிடைத்தவை 381 பதிகங்களே.  இப்பதிகங்கள் சைவத் திமுறை பன்னிரண்டுகள், முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிகத்திலும் பதினோரு பாடல்கள் உள்ளன.  இப்போது நமக்குக் கிடைப்பவை மொத்தம் 4181 பாடல்கள்.

திருஞானசம்பந்தர் தேவாரம்

சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்

முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்

துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்

பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

விளக்கம் : 

அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என் பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை `ஒரு முறை` என் செவி குளிரப் பேசுவாயாக.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

விளக்கம்;

இறைவன் மீது காதல் வசப்பட்டுக் உள்ளம் கசிந்து அன்பால் உருகி, இறை உணர்வில் கண்ணீர் பெருகி அவனை நினைத்து ஓதுபவர்களுக்கு நல்வழி தருவது அந்த நாமம். அது நான்கு வேதங்களில் உண்மைப் பொருளாக விளங்கும் சிவபெருமானின் நாமமான நமசிவாய எனும்  மந்திரமாகும்.

3. இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

 இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

 அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் :

திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சியுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுச் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

திருநாவுக்கரசர் குறிப்பு

திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் வேளாளர் குடியில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவ சமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்குக் கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார். இவரைத் திருஞானசம்பந்தர், ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால், இவரைத் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றார். 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

செவிக்கு இனிமையைத் தரும் குற்றமற்ற வீணையின் நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி கண்ணுக்கு குளிர்ச்சி தரும் நிலவொளியைப் போலவும், உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பத்தைத் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போன்றதே எனது தந்தையாகிய ஈசன் திருவடி நிழல் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.

2. குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

பொருள் : 

வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போ ன்ற சிவந்த வாயில் உண்டாகும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்ற வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம்தருகின்ற தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறும்பட்சத்தில் இவ்வுலகில் மனிதப்பிறவி எடுத்தலுக்கான விரும்பத்தக்க செயலாகும். 

3. புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச்

செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே

பொருள் : 

இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தர வேண்டும் என்று அப்பர் பெருமான் இறைவனிடம் வேண்டுகிறார்.

சுந்தரர் குறிப்பு

சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று திருமணத்தைத் தடுத்தார் எனப்படுகிறது. பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது எனப் புரிய வைத்தார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினைச் ‘சுந்தரர் தேவாரம்’ என்றும் அழைப்பர். இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றது. அவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால், பண் சுமந்த பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றது. அவற்றில் 100 பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.

சுந்தரர் தேவாரம்

1. வல்லது எல்லாம் சொல்லி உம்மை

வாழ்த்தி னாலும் வாய்திறந்து ஒன்று

இல்லை என்னீர் உண்டும் என்னீர்

எம்மை ஆள்வான் இருப்பது என்நீர்

பல்லை உக்கப் படுத லையில்

பகலெ லாம் போய்ப் பலிதிரிந்து இங்கு 

ஓல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர

ஓண காந்தன் தளியு ளீரே


பொருள் : 

திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, யாம் வல்ல கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை வாழ்த்தியபோதும், நீர் வாய்திறந்து, எமக்குக் கொடுக்க யாதேனும் ஒருபொருள் ‘இல்லை’ என்றும் சொல்கின்றீரில்லை; ‘உண்டு’ என்றும் சொல்கின்றீரில்லை; நீர் எம்மை ஆட்க்கொள்ள இருத்தல் எவ்வாறு? நாள்தோறும் சென்று, பல் நீங்கிய, இறந்தாரது தலையோடு இவ்வுலகில் பகலெல்லாம் பிச்சை ஏற்கத் திரிந்து வாழும், இவ்வாழ்க்கையை விரைவில் விட்டொழிய அருள்புரிய மாட்டீரோ.

2. பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்

மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே

 விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

பொருள் :

திருகுருகாவூர் வெள்ளடைக் கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானே! உன் கருணையின் திறத்தை நான் என்ன என்று புகழ்வது? நீ பரவெளியில் எங்கும் மேவி நிற்கின்றாய். இம்மண்ணுலகில் உனையே நினைந்திருக்கும் அடியார்கள் மனதில் குடிகொண்டிருக்கின்றாய். அவர்கள் மனதில் யாதொரு துன்பமும் இடரும் வாராது காக்கின்றாய். தமிழின் இனிமைபோலவும், பழத்தின் சுவையைப் போலவும், கண்ணின் மணியைப்போலவும், கடும் இருளில் ஒளிச்சுடர் போலவும் சிவானந்தம் தரும் பொருளாய் திகழ்கிறா யன்றோ!!

3. பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்;

  இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்-

 கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம் குலைக்கீழ்க் கருப்பாலை

 அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ

பொருள் : 

கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும்பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியேன். ஆதலின், முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன்; இரவும் பகலும் உம்மையே நினைவேன்; என்றாலும், உன்னை நிரம்ப நினையமாட்டேன்!

Post a Comment

0 Comments