google-site-verification: googlef09a89005d7755ea.html திருக்குறள் | நூற்குறிப்பு & குறள் விளக்கம்

திருக்குறள் | நூற்குறிப்பு & குறள் விளக்கம்

திருக்குறள் :

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பால்களைக் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது.

 133 அதிகாரங்கள்; 1330 குறட்பாக்களைக் கொண்டது. திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

அறத்துப்பால்-38 அதிகாரங்கள்

பொருட்பால்,-70 அதிகாரங்கள்

இன்பத்துப்பால் -25 அதிகாரங்கள்

திருக்குறள் வேறு பெயர்கள் :

உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து, முப்பால், உலகப்பொதுமறை, தமிழ் மறை, தெய்வ நூல், ஈரடி நூல், வான்மறை, பொதுமறை.

திருக்குறள் :

(வெகுளாமை)

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கா லென்.

தன்னைப் பழிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், தன்னைப் பழிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.

பழிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பழிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை. 

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.  

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.   

சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.    

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 

உள்ளான் வெகுளி எனின்.   

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

(இடுக்கண் அழியாமை)

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.   

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.  

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.   

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.  

தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்.  

விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.  

செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்.   

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.   

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.    

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.   

ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

(கனவுநிலை உரைத்தல்)

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து.   

 யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.    

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.  

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.  

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.   

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.   

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

என்எம்மைப் பீழிப் பது.  

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.   

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர்.   

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர்.   

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

Post a Comment

0 Comments