என் கண்ணீர்த் துடைத்த
முந்தாணையிலொன்று
பிடித்துணியாகி கிடக்கிறது
நீ புழங்கிய அடுப்படியில்
உன் மறைவுக்கு பிறகு
வேலையற்றுக் கிடக்கிறது
உன் உதடு பொருத்திய
ஊதுகுழல்
பாக்கிடிக்கியும்
வெற்றிலையுரலும்
பாதுகாக்கப்படுகிறது
மிச்சமிருக்கும் நினைவுகளோடு.
உணவருந்திய
உன் தட்டிலிருந்து
இப்போதெல்லாம்
எழுவதேயில்லை ஓசைகள்
நள்ளிரவில் புரண்டு படுக்கும்
கட்டில் சத்தத்தை
உற்று கேட்க முனைந்து
ஞாபகமுரைக்க..
இமைகள் சோர்ந்து
கவிழ்கின்றன
பீத்துணி கசக்கிய
உன் கரங்கள்
என்னிடமெதையும்
எதிர்பார்க்கவில்லையே
என்பதிலெழுகிறது
மீளாத்துயரலையொன்று
நான் வயிறு நிறைக்க
நீ பட்டினி கிடந்ததை
உன் சாவு வந்தா சொல்லியிருக்க
வேண்டுமென்னிடம்.
- கவிஞர் சூ. சிவராமன்.
Published in Nagore Puranam April month magazine 2025
0 Comments