ஈரோடு தமிழன்பன் :
ஈரோடு தமிழன்பன் (ஜெகதீசன்), 1938 இல் ஈரோட்டில் பிறந்து, பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவார்.
எளிய சொற்களில் ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தும் இவரது கவிதைகள் புதுக்கவிதையில் தனி முத்திரை பதித்தன; சமூக நீதிக்கான குரல் இவரது படைப்புகளில் ஒலித்தது. வணக்கம் வள்ளுவா, தீவுக்கு வெளிச்சம் தந்தவர்கள் உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளையும், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற நாடகங்களையும், கட்டுரைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார்.
இவரது இலக்கியப் பங்களிப்பிற்காக சாகித்ய அகாதமி விருது ("வணக்கம் வள்ளுவா"), கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஈரோடு தமிழன்பன் அவர்கள் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலமானார்.
ஒரு வார்த்தை ஏழு ரோஜாக்கள்
காலை எழுந்தவுடன் படித்தான் பாரதி. படிப்பவனுக்கு மட்டும்தான் காலைப் பொழுதே எழுகிறது. மற்றவர்களுக்குப் பகல் என்பது மற்றுமொரு இரவுப்பொழுதே! அதனால் குழந்தைகளே அதிகாலையில் எழுந்து பழகுங்கள்.
“குழந்தைகளிடம் எழுதும் கை எது? என்றும், கவிதை சொல்லும் வாய் எது? என்றும் நம்மவர்கள் கேட்டுப் பழக்குவதில்லை. அதற்கு மாறாக மாமனை உதைக்கும் கால் எது? என்று கேட்கிறோம். அவன் வளர்ந்த பிறகு அந்தக் கால்களின் உதைகள் மாமனுக்கு மட்டுமா? நம்மவர்களுக்கும் தான் என்று கவிஞர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.
குழந்தைகளே நீங்கள் சிலேட்டில் ஒருவரி எழுதினால், அதை ஆகாயம், ஆயிரம் முறை மின்னல்களால் அழித்தழித்து எழுதிப் பார்க்கிறது. உங்கள் மழலைச் சொற்களைக் கேட்க இந்தப் பிரபஞ்சமே ஒரு வார்த்தையாய் பிறக்க வரம் கேட்குமே. உங்கள் உதட்டில் ஒரு வார்த்தை மலர்ந்தால் இயற்கை அதை ஏழு ரோஜாக்களாக உச்சரிக்கும்.
வரிசையாக வரும் உங்கள் வாக்கிய நதியின் மேல் உங்கள் பார்வைப் படகு நகரும் போது அர்த்த அலைகள் ஆரவாரிக்கும். அவை புழுக்கள் நிறைந்த நதிகள் அல்ல. புண்ணிய நதிகள். புத்தகத்தின் எழுத்து நதிகள். அது புத்திக்கு வழி காட்டும் புனித நதிகள். குழந்தைகளே நீங்கள் “பென்சிலைச்” சீவும்போது உங்கள் அறிவு கூர்மையாகிறது.
இதுதான் உன் விதி என்று தலையில் எழுதும் இறைவன். நீங்கள் ‘ரப்பரைக்’ கையில் எடுத்தால் அவன் எழுது கோலைக் கீழே போட்டுவிடுவான். உங்கள் கையில் இருக்கும் படபடக்கும் புத்தகங்களின் பக்கங்களே உங்கள் இதயப் பறவையின் சிறகுகளாகும்.
நீங்கள் பிஞ்சுக் கையால் பிடித்திருப்பது புத்தகப் பையின் கைப் பிடியல்ல. அது சட்ட மன்றத்தின் சாவி வளையம். பாடும் குழந்தைகளே ஊமை நிலாவுக்கு உயிருள்ள அறைகூவல் நீங்களே. பொருள் நிரம்பிய பாடல்கள் உங்களிடமிருந்து புறப்படும் போது உங்கள் முகவரியைப் பலர் தேடுவர். எதிர் காலத்தில் உங்கள் வேலை எளிதாகும்.
புல்லாங் குழல்களே! அக்கினி அருவிகள் உம்மிடம் இருந்து புறப்படட்டும். மாடுகளைத் தொழுவத்திற்குக் கொண்டு வந்தது கட்டியது போதும், மனிதர்களைப் போட்டிகள் நிறந்த இவ்வுலகக் களத்தில் அணிவகுக்கச் செய்யுங்கள்.
கருவறையில் இருக்கும் குழந்தைகளே! பாடுங்கள். நாளை நம்பிக்கையோடு உங்கள் பாட்டு எதிரொலிக்கட்டும். உலகக் குழந்தைகளே உரக்கப் பாடுங்கள். உங்களுக்குச் சந்திர சூரியர்களைத் தபலாக்களாக்கித் (இசைக்கருவி) தருகிறேன்.
திசைகள் என்னும் திரைகளை விலக்கி இசையை முழங்குங்கள் கார்கால இடிகளை உங்களுக்கு ஆசிரியர்களாக அமர்த்துகிறேன் என்று குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் ஈரோடு தமிழன்பன் இக்கவிதையில் விளக்குகிறார்.
0 Comments