இன்றைய கேரளமான அன்றைய சேரளத்தில் ஊரெங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடுகள் தோறும் அலங்கரிக்கப்பட்டு தெருக்களிலெல்லாம் தொங்கவிடப்பட்டிருந்தது. தோரணங்கள்
அன்றைய நாள் சேரப் பேரரசின் தலைசிறந்த மன்னரான மூன்றாம் சேரமான் பெருமாளின் பிறந்தநாள் மற்றும் அரசராக முடி சூட்டப்பட்ட நாள். விண்ணை பிளக்கும் வாத்தியங்கள் முழங்க, குதிரை படைகளும் யானைப் படைகளும் அணிவகுத்துவர கம்பீரமான அரசு பீடத்தில் அமர்ந்து ஊர் மக்கள் எல்லோருக்கும் தனது கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்த வண்ணமே சேரமான் பெருமாள் நகர் வலம் வந்தார்.
மக்களெல்லாம் தங்களின் பரிசு பொருட்களை மன்னருக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டு தன் வீட்டிலிருந்து மலர்களை எடுத்து மன்னரின் மீது தூவி வரவேற்றனர். அந்த நகர்வலமோ ஊர் எல்லையில் இருந்து தொடங்கி அரண்மனையை சென்று அடைந்தது.
மன்னர் தனது பள்ளக்கிலிருந்து இறங்கி அரசவை கூடுமிடமான தர்பார் சென்று தனது சிம்மாசனத்தில் அமர்ந்தார். மக்கள் எல்லாம் சேரமான் பெருமாள் வாழ்க ! வாழ்க ! எங்கள் குல வேந்தா வாழ்க ! வாழ்க ! என்ற முழக்கங்களை எழுப்பினர்.
மன்னர் எழுந்து தனது கைகளால் மக்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு ராஜ குருவிடம் ஆசீ பெற்ற பின் மூத்த மன்னரின் அமைச்சரிடம் அவையை தொடங்குமாறு கேட்டுக் கொண்டார். உத்தரவுக்கிணங்க அவை தொடங்கியது. முதலாவதாக ராஜ்குரு ராமநம்பி எழுந்து, சேர சாம்ராஜ்யத்தின் ஈடு இணையற்ற அரசே! சேரமான் பெருமாள் வேந்தே! நீர் வாழ்க! இறையருளால் நீடூழி வாழ்க! என்று வாழ்த்துக்களை கூறிவிட்டு மக்களின் நோக்கி இன்று நாம் இங்கு கூடி இருப்பதற்கான காரணம் இரு பெரும் நிகழ்வுகளை கொண்ட இந்நாளை பொன் நாளாக கொண்டாடுவதற்கே. இன்னாள் சேர பேரரசின் மூன்றாம் சேரமான் பெருமாள் ஆகிய நம் மரியாதைக்குரிய மன்னர் பிரான் அவர்கள் மணிமுடி சூட்டப்பட்ட நாள் மற்றும் மன்னர் அவர்களின் பிறந்தநாள் என்பதனை இங்குள்ள நாம் அனைவரும் அறிவோம். இன்று போல் என்றும் மன்னர் பிரானின் ஆட்சியால் இந்த சோழ தேசம் செழித்தோங்கட்டும் என்றவாறு வாழ்த்தி கூறி விட்டு ராஜகுரு தனது ஆசனத்தில் அமர்ந்தார்.
பல மூத்த அமைச்சர்களின் உரைகளுக்கு பின்னர் ஊர் மக்களின் நடன நிகழ்ச்சிகளும் கூத்துக்களும் நடைபெற்றன. அவ்வேளையில் வெள்ளை நிற உடை உடுத்தியவாறு ஐந்து நபர்கள் அரசவைக்குள்ளே வந்தனர். இவர்கள் யார் என அரசர் கேட்பதனைப் போல் தனது பார்வை மூத்த அமைச்சரிடம் திருப்ப அவரோ தனக்குத் தெரியாது என்பதை போல் தலையையாட்டினார்.
பின்னர் அரசர் அவர்களை நோக்கி நீங்களெல்லாம் யார்? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? என கேட்டார். ஐவரும் தனது கரங்களை நெஞ்சில் வைத்து தனது தலையை சற்று சாய்த்தவாறு மரியாதை செலுத்துவிட்டு மன்னர் பிரானே நாங்கள் அரேபியர்கள். எங்கள் தேசத்திலிருந்து வியாபர நோக்கத்திற்காக மாலத்தீவிற்கு சென்றுக்கொண்டிருந்தோம். எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக தாங்கள் ஆட்சி புரியும் இந்த பூமியில் எங்கள் சகாகளுடன் இறங்கியுள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருந்த போது மற்றொரு அரபியர் இரண்டு மூட்டைகளையும் ஒரு பெரிய குவளையினையும் அரசவையில் முன்னிலையில் வைத்தார்.
மூத்த அமைச்சர் என்ன இது? என்று கேட்க அவர்கள் ஒரு மூட்டையில் சந்தன கட்டை மற்றொரு மூட்டையில் புகைத்தால் நறுமணம் தரும் கட்டைகளும் என்றனர். மூத்த அமைச்சர் சேதுபதி எழுந்து அந்தக் குவலை என்னவென்று கேட்க நறுமண திரவியம் என்று பதில் அளித்துவிட்டு மன்னர் பிரானுக்கு மரியாதை செலுத்தி நகர்ந்து சென்று தனது சகாக்களுடன் நின்று கொண்டனர்.
இதனை கண்ட ராஜகுரு ராமநம்பி ஆவேசமாக எழுந்து, மன்னர் பிரானே! இவர்களெல்லாம் புரட்சிக்காரர்கள். அரபுநாட்டில் முஹம்மத் என்று ஒருவர் தோன்றியுள்ளாராம். அவரை இறை தூதராக ஏற்றுக் கொண்ட இவர்கள் அந்நாட்டில் பாரம்பரியமாக வணங்கப்பட்ட சிலை வணக்கங்களை எல்லாம் எதிர்த்து புரட்சி செய்யும் கலக்கக்காரர்கள். இவர்களை இந்த மண்ணில் அனுமதித்தால் நமது மண்ணின் புனித தன்மை நீங்கிவிடும் என்றார்.
மன்னர் பிரான் ராஜகுருவை சற்று திரும்பி பார்த்துவிட்டு அரேபியரிடம் உங்கள் குழுவின் தலைவர் யார் ? என்று கேட்டார். அக்குழுவில் முஸ்லிம் பின் அத்ஹம் என்ற அரேபியர் முன் வந்து,மன்னர் பிரானே எங்களுள் தலைவர்கள் என்று எவரும் இல்லை. எல்லோரும் பங்குதாரர்கள் என்றார்கள். மேலும் கடல் சீற்றம் காரணமாக இந்த மண்ணில் இறங்கிய எங்களுக்கு சிறிது காலம் தங்கி வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். என்னுடன் குஸைப் பின் தார், அப்து மனாஃப், கப்பாப் பின் ஹகம் அப்துல்லாஹ் இப்னு குஹாபா என்று கூறி தனது சகாக்களையும் மன்னர் முன் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்டது போல் தலையையாட்டிய மன்னர் பிரான் காவலாளிகளை அழைத்து இந்த அரேபியர்கள் நமது விருந்தாளிகள் அரண்மனை முற்றத்திலுள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து செல்லுங்கள். நினைவிறுக்கட்டும் இவர்கள் ராஜ விருந்தாளிகள் என்றார். அரேபியர்கள் எல்லாம் மன்னர் பிரானுக்கு நன்றி தெரிவித்து விட்டு காவலாளிகளுடன் விருந்தினர் மாளிகைக்கு சென்றனர்.
மூத்த அமைச்சரை அழைத்த மன்னர் இவர்களை முழுமையாக கண்காணியுங்கள் ஆனால் ஒருபோதும் அவர்களுக்கு சந்தேகம் எழக் கூடாது மேலும் அவர்களுக்கு அளிக்கும் எந்த ஒரு மரியாதைகளிலும் சிறிதும் மாற்றம் ஏற்படக்கூடாது நினைவிருக்கட்டும் சேனாதிபதி அவர்களே என்றார். அரசவையும் கலையத் தொடங்கியது. மக்கள் ஒவ்வொருவராக அரண்மனையிலிருந்து வெளியாகினர்.
பெரிதும் அரேபியர்களுக்கு அரச மரியாதை அளித்த மன்னரின் நடவடிக்கை ராஜா குருவை வெறுப்பிற்குள்ளாகியது. இருப்பினும் இதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மன்னரை வாழ்த்திவிட்டு வெளியேறி அவையிலிருந்து மடாலயத்திற்கு சென்றார். இதனை எல்லாம் கண்ட மன்னரும் காணாதது போல் எழுந்து அரண்மனைக்குள்ளே சென்றார்.
நேரம் கடந்து சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஐந்து அரேபியர்களும் வெளியே வந்து முகப்பில் இருந்த தொட்டியில் இருந்து நீரை எடுத்து முகம் கைகால்கள் கழுவி விட்டு ஒருவருக்கு பின் நால்வரும் கைகளை கட்டிக் கொண்டும் குனிந்து நிமிர்ந்து எழுந்து பூமியை வணங்குவது போல் ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதனை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் அருகாமையிலுள்ள அரச குலத்தின் அருட்காட்சியத்தினை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தனர்.
அவர்கள் அருகில் ஒரு காவலாளி வந்து எதிரே இருந்த கண்ணாடி பெட்டியிலிருந்த ஒரு கிரீடத்தை காண்பித்து இது முதலாம் சேரமான் பெருமாள் சூட்டிய கிரீடம். இதில் விலை உயர்ந்த மாணிக்கங்களும், மரகத மணிகளும் பொதிக்கப்பட்டுள்ளன. இது எமது சாம்ராஜ்யத்தின் அடையாளம் என்றவாறு மார்தட்டி கூறினார். அரண்மனையின் இந்த அருங்காட்சியகத்தில் இத்தகைய பொருட்களையெல்லாம் பார்ப்பது என்பது அரிதினும் அரிது என்று கூறிக் கொண்டிருக்க இதனை ஒரு பெரிது படுத்திடாது அங்கிருந்து கடந்து சென்ற அந்த அரேபியரை பார்க் காவலாளி பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்.
- மு. முஹம்மது சுஹைப்
Published in Nagore Puranam January month magazine 2025
0 Comments