கோவிலின் உள்ளே சென்று விட்டு வெளியே வந்த மன்னரை அழைத்த அத்ஹம், தாங்கள் யார்? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அரபு நாட்டிலிருந்து இங்கு வியாபார நோக்கமாக மன்னரின் அரண்மனையில் தங்கியிருக்கிறோம். தங்களை வெகு நேரமாக நோட்டுமிட்டு கொண்டிருந்த ஒருவன், நீங்கள் கோயிலுக்குள் செல்லும்போது உங்களை கத்தியால் குத்த முற்பட்டான். இதனை எதிர்பாராத விதமாக பார்த்த நாங்கள் அவனை பிடித்து கை கால்களை கட்டி அருகாமையில் உள்ள இடத்தில் வைத்திருக்கிறோம் என்றார். மன்னர் அவரிடம், அத்ஹம் நான் யார் என்று தெரிகிறதா ? என்று கேட்டபோது எனக்கு தெரியவில்லை என்றதாக பதில் அளித்தார். நான் தான் சேரமான் பெருமாள் என்ற போது அத்ஹம் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.
மன்னர் காவலாளிகளை அழைக்கவே, குஹாபாவிடமிருந்த அந்த மர்ம நபரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அத்ஹம் மற்றும் குஹாபாவின் கைகளை பிடித்து தன் உயிரை காப்பாற்றியமைக்கு நன்றி தெரிவித்தார் மன்னர் சேரமான் பெருமாள். அன்றிரவு முழுதும் மன்னருக்கு சரியான உறக்கமில்லை. தனது படுக்கையில் இருந்து எழுந்து அரண்மனையின் முற்றத்தில் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தார்.
இதனைத் தூரத்திலிருந்து கண்ட தலைமை அமைச்சர் அருகில் வந்து, மன்னர் பிரானே! இரண்டாம் ஜாமம் ஆகிறது. தாங்கள் இன்னும் உறங்க செல்லவில்லையா ? என்றவாறு கேட்டார். அமைச்சரின் தோளில் தனது கைகளை வைத்துபடி நடந்து கொண்டே மன்னர் அவரை நோக்கி, என்னால் முடிந்தவரை எல்லோருக்கும் நீதமாக தான் ஆட்சி செய்கிறேன். யாருக்கும் எந்தவித பாகுபாடுகளும் இன்றி எல்லோருக்கும் தான் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் என்னை கொல்வதற்கும் இந்நாட்டில் மக்கள் இருக்க தானே செய்கிறார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் நான் பாமர மக்களைப் போல் ஊருக்குள் உலாவ சென்ற செய்தி என்னை கொல்ல வந்தவனுக்கு எப்படி சென்றது? அப்படியானால் நமது அரண்மனையிலேயே நம் சாம்ராஜ்யத்திற்கு எதிரிகள் இருக்கிறார்கள் அல்லவா என்றார். இதற்கு ஆம் என்று சொல்வதா தெரியாமல் இரு கண்களை விழித்துக் கொண்டவராக மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தார் தலைமை அமைச்சர்.
எனக்குத்தான் உறக்கம் வரவில்லை அமைச்சரே! நீங்களாவது ஓய்வெடுங்கள் என்று மன்னர் கூற, அந்த ஆணைக்கிணங்கியபடி அங்கிருந்து எழுந்து உறங்கச் சென்றார் தலைமை அமைச்சர்.
ஆழ்ந்த சிந்தனையோடு விண்ணை பார்த்துக் கொண்டிருந்த மன்னர், சட்டென்று நிலவு இரண்டாக பிளந்து மீண்டும் ஒன்று சேரும் காட்சியைக் கண்டார். ஓரிரு விநாடியே நடந்த இக்காட்சியினை யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? என்ற வியப்பில் ஆழ்ந்தவாரே அங்கிருந்து எழுந்து விடை தெரியாத வண்ணமே யோசித்தவராய், தனது அறைக்குச் சென்றார்.
காலைப்பொழுதானதும் தலைமை அமைச்சரைச் சந்தித்து தான் கண்ட காட்சியினைக் கூறினார். நேர்மையின் சிகரமான மன்னர் பிரான் பொய்யுரைக்க மாட்டார் என்று உணர்ந்திருந்த அமைச்சர் மனதில், நிலவு பிளந்தது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவே அமைந்தது.
இது ஒருபுறம் இருக்க, ராஜகுரு ராமநம்பியின் மற்றொரு விசுவாசியான மார்த்தாண்ட பூபதி என்னும் சேனாதிபதி ஐந்து காவலர்களை அழைத்துக் கொண்டு பாமர மக்களைப் போல் கப்பல் கட்டும் துறைக்குச் சென்று அங்கே தங்கியிருக்கும் அரேபியர்களைக் கைது செய்ய முற்பட்டார். அங்குள்ள அரேபியர்களுக்கு இவர்கள் அரசு பணியாளர்கள் என்பது தெரியாமல் ஐவரையும் அடித்து கை கால்களைக் கட்டி அடைத்து வைத்தனர். இச்செய்தி அரைகுறையாக அரசவையை எட்டவே! அவ்விடத்திற்கு தலைமை அமைச்சரும் காவலர்களும் விரைந்து சென்றனர்.
அங்கு நடந்தவைகள் குறித்து விசாரிக்கப்பட்டது. சேனாதிபதி மற்றும் காவலர்களை விடுவித்ததும் அவர்கள் அங்கிருந்த அரேபியர்களைக் கடுமையாக தாக்கம் முற்பட்டனர். அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென தலைமை அமைச்சரிடம் சேனாதிபதி கோரிக்கை வைத்தார்.
அரேபியர்கள் அமைச்சரை நோக்கி, நடந்தவைகளுக்கு நாங்கள் அனைவரும் வருத்தம் தெரிவிக்கிறோம். இவர்கள் அரசு ஊழியர்கள் என்பது எங்களுக்கு தெரியாது. கள்வனை போல் சட்டென நுழைந்து எங்களை தாக்கினர். தற்காப்பிற்காகவே இவர்களைத் தாக்கினோமே அன்றி எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது அமைதியும் சகோதரத்துவமுமே என்றார்.
சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு அரண்மனை காவலர்கள் புடை சூழ மன்னர் சேரமான் பெருமாள் வருகை தந்தார்.
சேனாதிபதியாரே! நான் தான் இவ்வழக்கு விசாரணையை என் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன் அல்லவா, அதற்குள் இங்கு வந்து இந்த அரேபியர்களைக் கைது செய்யும் அதிகாரம் உமக்கு யார் அளித்தது? என்று கேட்டார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய சேனாதிபதி, மன்னர் பிரானே! இவர்கள்தான் அந்த கிரீடத்தைத் திருடியவர்கள். இவர்களைப் பிடித்து அரண்மனை காவலில் வைத்து கடுமையான தண்டனை அளியுங்கள் இவர்களே அதனை ஒப்புக் கொள்வார்கள் என்றார்.
சட்டென முகம் சிவந்தவராய் மன்னர் பிரான் சேனாதிபதியை நோக்கி, உம்மிடம் இவர்கள்தான் குற்றவாளிகள் என்று மெய்பிப்பதற்கான தரவுகள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்குப் பதில் கூற முடியாமல் தலை தொங்கியவராய் சேனாதிபதி நின்றார்.
பின்னர் தலைமை அமைச்சரை உடன் அழைத்துக் கொண்டு மன்னர் தனது பல்லக்கில் ஏறி அரண்மனையை நோக்கி புறப்பட்டார்.
செல்லும் வழியில் தலைமை அமைச்சரிடம் நடந்தவைகள் குறித்து உரையாடினார். எனது ஆணையையும் மீறி அந்த அரேபியர்கள் வாழும் கடற்கரை கூடாரத்திற்குச் செல்லும் அதிகாரத்தை அந்த சேனாதிபதிக்கு யார் கொடுத்தது? என்று அமைச்சரிடம் கேட்க, அவரோ மன்னர் பிரானே! சேனாதிபதி தங்களை விட ராஜகுருவின் உண்மை விசுவாசி. மேலும் அங்கிருந்த காவலர்கள் பேசிக் கொண்டதை நான் செவியுற்றேன். ராஜகுருவின் உத்தரவுகிணங்கியே அரேபியர்களை கைது செய்வதற்காக சேனாதிபதி பாமரர்களை போல் சென்றுள்ளார் என்பது எனக்கு கிடைத்த செய்தி என்றார்.
பல்லக்கு அரண்மனையை வந்தடைந்தது. கலைப்புற்றவராய் தனது இருக்கையில் அமைந்த மன்னர், தலைமை அமைச்சரே! அரேபியர்களின் மீது ராஜகுருவுக்கு ஏன் இவ்வளவு கால் புணர்ச்சி? இது போதாது என்று நமது சாம்ராஜ்யத்தின் செங்கோலான கிரீடமும் களவு போயிற்று.
இவைகளை விட எனக்கு பெரும் ஆச்சரியம் என்னவென்றால் நான் பாமர மக்களை போல் ஊருக்குள் உலாவ சென்ற செய்தி என்னை கொலை செய்வந்தவனுக்கு எப்படி தெரிந்திருக்கும் ? என்பதாக கேட்டார். மன்னர் பிரானே! இந்த விடயங்களின் சூட்சமத்தையும் அறிய தங்களை கொலை செய்ய முற்பட்ட அந்த மர்ம நபரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
ஆலோசனையை ஏற்ற மன்னர் பிரான் கொலை செய்ய முற்பட்ட குற்றத்திற்காக கடுங்காவிலே வைக்கப்பட்ட அந்த மர்ம நபரை அழைத்து வர காவலாளியிடம் உத்தரவிட்டார்.
தனது தடித்த வாலை உருவி அந்த கயவனின் கழுத்தில் வைத்த மன்னர், நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையை உரைத்து விடு, இல்லையெனில் இக்கணமே உன் தலையும் உடலும் இரு துண்டாகிவிடும் என்றார்.
- மு. முஹம்மது சுஹைப்
Published in Nagore Puranam March month magazine 2025
0 Comments