இயேசு காவியம்
இயேசு காவியம் என்பது கவியரசர் கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட ஒரு புகழ் பெற்ற தற்காலத் தமிழ்க் காவியமாகும். இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் கூறுகிறது. கிறிஸ்தவ சமயத்தினரின் புனித நூலான பைபிளைத் தழுவி எழுதப்பட்ட இந்த காவியம், கண்ணதாசனின் கவித்திறனுக்கும், சமய நல்லிணக்க எண்ணத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இயேசு காவியம் - ஊதாரிப் பிள்ளை
பொருள் :
ஒரு பணக்கார தந்தைக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு ஊர் முழுவதும் சொத்துகள் இருந்தன . இரு மகன்களில் மூத்தவன் மணியான முத்து போன்றவன். நல்ல குணங்களை உடையவன். தந்தையின் பேச்சினை கேட்பவன். இளைய மகனோ எதற்கும் பயன்படாத நெத்தாக வாழ்ந்தான். விடாமல் பெய்கின்ற மழையில் விதைக்கப்பட்ட விதை கரை ஒதுங்குவது போல எதற்கும் பயன்படாதவன். ஒரு நாள் தனது தந்தையிடம் தனக்குரிய சொத்தைப் பிரித்து தர வேண்டும் என்று கேட்டான். அதை கேட்டவுடன் தந்தையின் மனம் துடி துடித்தது. இருந்தாலும் மகனின் ஆசைக்காக சொத்தில் பாதியைப் பிரித்து கொடுத்தார்.தன் மகன் நன்றாக வாழட்டும் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. கண்ணிருந்தும் அந்த இளைய மகன் கால் போன போக்கில் நடந்தான் . சொத்துக்களைக் குறைந்த விலைக்கு விற்று வெளிநாட்டிற்குச் சென்று ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். மதுவிற்கும் விலை மகளிர்க்கும் பணத்தைச் செலவழித்து அவர்களுக்கு அடிமையாகிக் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டான். இந்த வாழ்க்கை நீண்ட நாள் தொடரவில்லை. கையில் இருந்த அனைத்து சொத்துக்களும் தீர்ந்து போயின. பொருள் தேய்ந்து போனதோடு புகழும் குன்றிப்போனது. நீர் அற்ற குளத்து அருநீர் பறவை போல தனிமையில் வாடிபோனதோடு அந்நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது என்ன செய்வது என்று தெரியாமல் சிந்திக்கத் தொடங்கினான். தெருக்களில் வாழ்க்கையைத் தேடி ஓடி அலைந்தான். பசியை போக்க வேலை தேடத் தொடங்கினான். எந்த ஒரு வேலையையும் அவனுக்குப் பார்க்கத் தெரியவில்லை. இறுதியாக அவனுக்கு பன்றிகள் மிகுந்திருக்கக் கூடிய ஒரு பண்ணையில் வேலை கிடைத்தது. வேலைக்குக் கூலியாக பன்றிகள் உண்ணும் தவிடே அவனுக்கும் உணவாகக் கொடுக்கப்பட்டது. தந்தையோடு வாழ்ந்த போது சுகபோகமாக இருந்ததைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான். எப்பொழுதும் தந்தையின் நினைவாகவே இருந்தான். அப்பொழுது அவனது அறிவு தெளிவு பெற்றது. தவறை உணர்ந்து தந்தையின் கால்களிலே விழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தந்தையே, கடவுளுக்கும், உமக்கும் முன்பாக நான் தவறு செய்துவிட்டேன் என்று கூறி அழவேண்டும் என்று அவன் உள்ளம் எண்ணியது. வீட்டில் பணியாளர்கள் பலர் இருக்க நானோ வீட்டை விட்டு வெளியேறி மனம் போன போக்கில் அலைந்தேன். உங்கள் பிள்ளை என்று சொல்ல நான் தகுதியற்றவன். எனவே உங்கள் வீட்டு பணியாளர்களுள் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என தந்தையிடம் மன்னிப்பு கேட்க நினைத்தான் ஊதாரி மகன். தனது வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான். மகன் என்றாவது திரும்பி வந்து விடமாட்டானா என்ற வேட்கையுடன் விருப்பத்துடன் தந்தை எதிர்பார்த்து காத்திருந்தார். தூரத்திலிருந்து மகன் வருவது தெரிந்ததும் அவருக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது . வேகமாக ஓடிச் சென்று அவனைத் தழுவி என் மகனே என்று அழைத்து நீ எப்போது வருவாய் என்று காத்திருந்தேன். என் மகனே நீ மெலிந்து விட்டாய் கண்மணியே தேனே இனி நீ வருந்த வேண்டாம் நீ தப்பான பிள்ளை இல்லை உனது சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டது என்ற தந்தை உடனே பணியாட்களை வர வைத்து விலை மதிப்புமிக்க பட்டா டைகளையும் அணிகலன்களையும் எடுத்து வரச் சொன்னார். அவற்றை மகனுக்கு அணிவிக்குமாறு கூறினார். தன் பெயர் சொல்லும் மகனுக்கு பெருங்கன்றின் கறியினை சுவையாகச் சமைத்து விரைவாகக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். மாலை நேரம் மூத்த மகன் வயலில் இருந்து வீட்டிற்கு திரும்பினான். வீட்டிற்குள் இருந்து சங்கீதமும் ஆடல் வகை நூறும் நடப்பது அவனுக்கு தெரிந்தது. வீட்டு வாசலில் நின்று கொண்டு வேலை ஆள் ஒருவன் மூலம் தம்பி வந்து இருப்பதையும் வீட்டிற்குள் நடப்பதையும் அறிந்து கொண்டான். தந்தையோ மூத்த மகன் வெளியில் கோபத்தோடு நிற்பதைப் பார்த்து அவனைத் தேடி வந்தார். மூத்தவனோ இதுவரை நான் உங்களுடன் இருந்துள்ளேன். என்றாவது எனக்கு இத்தகைய விருந்தினை தந்தது உண்டா? சாத்திரத்தை மறந்தவனுக்கு இவ்வளவு சிறப்புகள் நடக்கிறது. உங்களோடு இருந்த நான் என்ன கண்டேன் என்று கூறி கண்கலங்கினான். உடனே தந்தை மிகவும் கருணையோடும் கனிவோடும் என்றும் என்னோடு இருப்பவன் நீதானே எனக் கூறி எல்லாம் உனக்குத் தானே. உன் தம்பியோ இறந்தபின் மறுபிறவி எடுத்து மீண்டு வந்துள்ளான் அதற்காக இந்த ஏற்பாடுகளை செய்தேன் என்றார்.
0 Comments