google-site-verification: googlef09a89005d7755ea.html நாயகம் ஒரு காவியம்

நாயகம் ஒரு காவியம்

 

நாயகம் ஒரு காவியம் – மு.மேத்தா

மு. மேத்தா அவர்கள் எழுதிய "நாயகம்" காவியம், நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை வரலாற்றை எளிய, கவித்துவமான தமிழில் எடுத்துரைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

கவிஞரின் தனித்துவமான மொழி நடையில் வரலாற்றுத் தகவல்களும், இஸ்லாமிய விழுமியங்களும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன; 

நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் அவரது போதனைகள் வரையிலான முக்கிய நிகழ்வுகள் கவிதை வடிவில் அழகாகக் கோர்க்கப்பட்டுள்ள இக்காவியம், இஸ்லாமிய சமயத்தின் முக்கியத்துவத்தையும், நபிகள் நாயகத்தின் போதனைகளின் உலகளாவிய தன்மையையும் மற்ற மதத்தினரும் புரிந்து கொள்ள உதவும் ஒரு பாலமாக அமைகிறது; 

மேலும், இஸ்லாமியத் தலைவரின் வரலாற்றை தமிழ் இலக்கியத்தில் ஒரு காவியமாகப் பதிவு செய்ததன் மூலம் "நாயகம்" தமிழ் இலக்கியத்தின் பரப்பை விரிவுபடுத்துவதுடன், தமிழ் இலக்கியத்திற்கு ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகவும் திகழ்கிறது.


பாம்பின் நேசமும் தோழரின் பாசமும்

பகைவரிடம் தப்பி வந்து நீண்ட பயணத்தால் சோர்ந்திருந்த அண்ண லார்க்குத் தாய்மடியாய் பெருமாட்டி, கதீஜாவின் தளிர்மடியைப்போல நபித்தோழர் அபூபக்கர் தன்மடியைத் தந்தார். பொன்மாணிக்க மகுடத்தைப் பஞ்சணையில் வைத்த தைப்போல் குகைக்குள்ளே அபூபக்கரின் மடிமேல் அண்ணல் நபி தலைவைத்துத் தூங்குகிறார். உயிர்த்தோழர் அபூபக்கரின் காவலில், உலகத்தின் துயிலை நீக்க வந்த வள்ளல் உறங்குகிறார். அழகு நபி திருமுகத்தைப் பார்த்துப் பார்த்தே அபூபக்கர் மகிழ்கின்றார்.

அந்த நேரம், குகைக்குள்ளே அடைக்காதப் பொந்து ஒன்றில் குடியிருந்த பாம்பொன்று தலையை நீட்டியது. அதைப் பார்த்த தோழர் அபூபக்கரின் மனம் பகையென்று பதறுகிறது. ஆனால் பாம்புபோ நபிமுகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் வெளிவருகின்றது. அன்றாடம் நஞ்சுமிழ்வார் ஒருநாள் அன்பாய் அமுதம்தர முன்வந்தால் யாரும் நம்புவாரோ? அதனால் நின்றிருந்த பாம்புதனை அடிக்கத் தோழர் அபூபக்கர் நினைக்கின்றார். ஆனால் இடத்தைவிட்டு அகன்றால் அண்ணல் நபி உறக்கத்திலிருந்து விழிப்பாரே என்று நினைக்கின்றார். அயர்ந்துறங்கும் அண்ணல் நபியின் தூக்கத்தைக் கலைவது தவறு என்று தயங்காமல் முடிவெடுத்த அபூபக்கர் தம் காலால் பாம்பிருந்த பொந்தை அடைத்தார்!

பாசமுடன் அண்ணல் நபியின் முகத்தைப் பார்க்கவந்த பாம்புக்கு நபித்தோழர் மீது கடுங்கோபம். தன் ஆசைக்குக் குறுக்கே நிற்கும் தோழரின் கால் மீது சீறிப்பாய்ந்தது. முழுநஞ்சையும் வேகமுடன் பல்லுக்கேற்றி பாசமலர்க் காதலரான அபூபக்கரைப் பாம்பு கொத்தப் விஷம் தலைக்கேறித் துடிதுடித்தார் தோழர்! ஆனாலும் அபூபக்கர் தன்காலைப் புற்றிலிருந்து அகற்றவில்லை! சிறிதேனும் அசைக்கவில்லை! கொடிய நாகம் குகைக்குள்ளே வரக்கூடாது; திருத்தூதரின் துயிலைக் கலைக்கக் கூடாது என்ற உறுதியில் இருந்தார் நபித்தோழர்.

மிகுந்த வேதனையால் நபித்தோழர் கண்ணை மூடி வீற்றிருந்தார்! கன்னத்தில் கண்ணீர் ஓடி அண்ணல் நபி முகத்தில் விழுந்தது. கண் விழித்த நாயகமோ நாடந்ததை அறிந்து கொண்டார். உள்ளம் உருகி தோழர் அபூபக்கரை அண்ணல் நபி இதயத்தால் தழுவிக் கொண்டார். அல்லலுற்ற அபூபக்கரின் துயரை நீக்க அண்ணல் நபி தம் உமிழ்நீரைப் பாம்பு கடித்தயிடத்தில் தொட்டு வைத்தார். அடிவானம் பகற்பொழுதை விழுங்கிப் பின்னர் அந்தியினை பூமியிலே உமிழ்ந்ததைப்போல் உமிழ்நீரை மருந்தாய் ஏற்றுக் கடுநஞ்சு உமிழ்நீராய் உமிழ்ந்தது. தலைக்கேறிய பாம்பின் விஷத்தை நீக்கி தோழர் அபூபக்கரின் உயிர் காத்தார் அண்ணல் நபி.

Post a Comment

0 Comments