google-site-verification: googlef09a89005d7755ea.html மரம் கவிதை ! - கவிப்பேரரசு வைரமுத்து

மரம் கவிதை ! - கவிப்பேரரசு வைரமுத்து

 


கவிப்பேரரசு வைரமுத்து :

வைரமுத்து அவர்கள் ஜூலை 13, 1953 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் பிறந்தார். இயற்பெயர் ராமசாமி என்றாலும், வைரமுத்து என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார். மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். தனது 18 வயதில் "வைகறை மேகங்கள்" என்ற முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். கவியரசு கண்ணதாசனின் தீவிர ரசிகரான வைரமுத்து, அவரது வழிகாட்டுதலின்படி திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டு "நிழல்கள்" திரைப்படத்தில் "பொன்மாலைப் பொழுது" என்ற பாடல் மூலம் தனது திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக விளங்கும் வைரமுத்து, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதுவரை 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் கவித்துவமான வரிகள், தத்துவார்த்தக் கருத்துக்கள் மற்றும் எளிய சொற்களால் ஆழமான அர்த்தங்களைத் தெரிவிக்கும் திறன் ஆகியவற்றால் புகழ்பெற்றவை.

திரைப்பாடல்களுக்கு மட்டுமல்லாமல், கவிதை, நாவல், கட்டுரை எனப் பல்வேறு இலக்கியப் படைப்புகளையும் வைரமுத்து உருவாக்கியுள்ளார். "கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலுக்காக 2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றார். மேலும், "இதுவரை நான்" என்ற சுயசரிதை நூல் உட்பட 37-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

வைரமுத்துவின் இலக்கிய மற்றும் திரை இசைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கியுள்ளது. ஆறு முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் அவர் பெற்றுள்ளார். கலைஞர் கருணாநிதி இவருக்கு "கவிப்பேரரசு" என்ற பட்டத்தை வழங்கினார். வைரமுத்துவின் பாடல்கள் மற்றும் இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

மரம் கவிதை விளக்கம் :

மரம் என்பதை கேளிப்பொருளாகக் கூறிய புலவர் பெருமக்களை எச்சரிக்கும் விதமாக வைரமுத்து கவிதையைத் தொடங்குகிறார்.

மக்கட் பண்பில்லாதவரை மரம் என்று கூறிய வள்ளுவரையும், நீட்டிய ஓலைச்சுவடியை வாசிக்கத் தெரியதவனை மரம் என்று கூறிய ஔவையையும், பாஞ்சாலியை மீட்காத பாமர மனிதர்களை நெட்டைமரம் என்று கூறிய பாரதியையும் எச்சரித்து மரத்தின் பெருமைகளைக் கவிஞர் கூறித்தொடங்குகிறார்.

மரம் சிருஷ்டியின் சித்திரம். பூமியின் ஆச்சரியக்குறி. நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம். மரத்தின் கிளைகள் விண்மீனுக்குத் தூண்டில் போடும். சிறிப்பை ஊற்றி வைத்த இலைகள், உயிர் ஒழுகும் மலர்கள். மனிதன் தராத ஞானத்தை மரம் தரும். மனிதன் தோன்றுவதற்கு முன் மரம் தோன்றியது. மரம் நமக்கு அண்ணன். அண்ணனைப் பழிக்காதீர்.

மனித ஆயுள் என்பது நீர்க்குமிழிக்குள் கட்டிய கூடாரம் போன்றது. வளரும் உயிர்களில் அதிக ஆயுட்காலம் கொண்டது மரம் மட்டுமே. முப்பது வயது வந்தால் மனினுடைய வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி. அதன் பிறகு அவன் வளர்வதில்லை.

மரம் இருக்கும் வரை பூ பூக்கும். இறக்கும் வரை காய் காய்க்கும். மரக்கிளையை வெட்டி நட்டால் கிளை மரமாகும். மனிதா உன் கரத்தை வெட்டி நட்டால் உடம்பாகுமா? மரத்தை அறுத்தால் அதன் வளையம் வயது சொல்லும். மனிதா உன்னை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும். மரத்திற்கு வழுக்கை விழும் மறுபடியும் முளைக்கும். ஆனால் நமக்கோ உயிர் பிரிந்தாலும் மயிர் உதிர்ந்தாலும் மீண்டும் வளர்வதில்லை.

மரங்கள் இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றை எங்கு போய் சலவை செய்ய? மரங்கள் இல்லையெனில் மழை வேண்டி எங்கு போய் மனுகொடுக்க. மரங்கள் இல்லை என்றால் இந்த பூமியின் மடியில் ஏதப்பா ஏரி. மனிதனின் முதல் நண்பன் மரம். அதைபோல மரத்திற்கு முதல் எதிரி மனிதன். ஆயுதங்களை மனிதன் அதிகம் பயன்படுத்தியது மரங்களின் மீதுதான்!

உண்ண கனி, ஒதுங்க நிழல், தங்குவதற்கு குடிசை, அடைக்கதவு அழகுவேலி, ஆடத்தூளி, தடவத்தைலம், தாளிக்க எண்ணெய், எழுதகாகிதம், எரிக்க விறகு என்று மனிதனின் அன்றாட தேவைகளுக்குப் பயன்படுவது மரம்தான். எல்லாம் மரம்தான். ஆனால் அதை மனிதன் மறந்தான்.

நாம் பிறந்தோம் தொட்டில் மரத்திலிருந்து வந்தது. நடந்து பழகிய நடைவண்டி மரத்திலிருந்து வந்தது. எழுதினோம் பென்சில், மரப்பலகை மரத்திலிருந்து வந்தது. மாலை, சந்தனம் மரத்திலிருந்து வந்தது. கலந்த கட்டி மரத்திலிருந்து வந்தது. தலையணை, பஞ்சு மரத்திலிருந்து வந்தது. நடந்தோம் பாதுகை, (செறுப்பு) ரப்பர் மரத்திலிருந்து வந்தது. இறந்தோம் சவப்பெட்டி, பாடை மரத்திலிருந்து வந்தது. எறித்தபோது விறகுகூட மரத்திலிருந்து வந்தது.

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான். மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான். ஒவ்வெரு மரமும் ஞனத்தைத் தருகின்ற போதி மரம்! என்று தெளிந்த சிந்தனையுடன் உணர்ச்சிபொங்க, மரத்தின் பெருமைகளைக் கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார்.

Post a Comment

0 Comments