google-site-verification: googlef09a89005d7755ea.html நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி

நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி

 


கவிஞர் அறிவுமதி

கவிஞர் அறிவுமதி அவர்கள் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் மதியழகன் ஆகும். இவர் விருத்தாசலம் அருகில் உள்ள சு. கீணனூரில் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த ஆர்வத்தால் கவிஞர் மீரா இவரை கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். திரைத்துறையில் பாடலாசிரியராகப் பணியாற்றிய இவர், பல கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். "நட்புக்காலம்" இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகும். கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை வழங்கிய கவிக்கோ விருதை இவர் பெற்றுள்ளார். மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் "உலகத் தமிழ்ப் பீட" விருதும் இவருக்கு வழங்கப்படவுள்ளது. அறிவுமதி அவர்களின் பாடல்களும் கவிதைகளும் எளிய சொற்களில் ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ளன.

நட்புக்காலம் :

கவிஞர் அறிவுமதியின் நட்புக்காலம் என்ற கவிதை ஆண், பெண் நட்பின் இலக்கணத்தை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது. ஆண், பெண் நட்பை இவ்வளவு அழகாக யாரும் சொல்லவில்லை என்றே கூற வேண்டும். தன் தோழியை நினைத்து மலரும் நினைவுகளாகத் தோழன் கூறுவதாகக் கவிதை அமைகிறது.

தன்னுடைய பெண் தோழியின் பிறந்த நாளுக்காக வாழ்த்து அட்டைகளில் நல்ல வாசகத்தைத் தேடி ஏமாந்த சலிப்பில் உனக்கான என் கவிதை தொடங்கிற்று. நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் நமக்கான நட்பை உணர்ந்தேன். நீ வயசுக்கு வந்தபோது நான் வெட்கப்பட்டுத் தடுமாறிய போது என் கூச்சத்திற்குக் குட்டு வைத்து நம் நட்பைக் காப்பாற்றியவள் நீதான். நான் உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகு தான் சாலை ஓர மரங்களிலிருந்து உதிரும் பூக்களில் இசை கேட்க ஆரம்பித்தேன்.

 உனது வீட்டிற்கு என்னை நீ அழைத்துச் சென்றபோது உன்னுடைய அம்மா அப்பாவிடம் முதன்முதலாக அறிமுகப்படுத்திய போது வழக்கமான அம்மாக்களின் சந்தேகத்தைப்போக்க “எப்போதும் இவன் உன் மருமகனாக முடியாது ஏனெனில் இவன் என் நிச்சயிக்கப்பட்ட நண்பன்” என்று கூறிய உன் குரல் இப்போதும் என் மனதில் கேட்கிறது. தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது. தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது. நீ நிருபித்த பெண்மையிலிருந்து வாய்த்தது நான் மதிக்கும் ஆண்மை.

கடற்கரையில் முகம் தெரியாத இரவில் பேசிக் கொண்டிருந்த நம் இருவரையும் நண்பர்களாகப் பார்க்கும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு வாய்த்திருக்கும். தேர்வு முடிந்த கடைசி நாளில் நினைவேட்டில் கையொப்பம் வாங்குகிற எவருக்கும் தெரிவதில்லை அது ஒரு நட்பு முறிவிற்கான சம்மத உடன்படிக்கை என்று. காமத்தாலான இவ்வுலகில் நட்பைச் சுவாசித்தல் அவ்வளவு எளிதன்று. பேருந்து நிறுத்தத்திற்குச் சற்றுத் தள்ளி நின்று பேசுகிறவர்கள் காதலர்கள். நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள் நண்பர்கள். அந்த நீண்ட பயணத்தில் என் தோளில் நீயும் உன் மடியில் நானும் மாறிமாறி தூங்கிக்கொண்டு வந்தோம் தூங்கு என்று சொன்னதும் தூங்கிவிடுகிற சுகம் நட்புக்குத்தானே வாய்த்திருக்கிறது.

எதைப் பற்றித்தான் நாம் பேசிக் கொள்ளவில்லை கண்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள் கண்களை வாங்கிக் கொண்டு உன்னைப் போல் கண்கள் தருகிறவள்தான் தோழியாகிறாள். எனக்குப் பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய் உனக்குப் பிடித்தததையே நான் தேர்ந்தெடுத்தேன் அதனால் தான் நட்பு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

Post a Comment

0 Comments