பாரதியார்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் இலக்கியத்திலும் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஒரு முக்கியப் பங்காற்றிய பல்துறை ஆளுமை. கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், தனது எழுத்துக்களின் மூலம் தேசிய உணர்வை மக்களிடையே ஊட்டினார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற காவியங்களும், புதிய ஆத்திச்சூடி போன்ற அறநெறிப் படைப்புகளும் இவரின் இலக்கியப் பங்களிப்புகளின் சிறந்த எடுத்துக்காட்டுகள். பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற புரட்சிகரமான கருத்துக்களைத் துணிவுடன் வெளியிட்ட இவர், தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்த முன்னோடிகளில் ஒருவராவார். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்ற அவரது கூற்று, தமிழ் மீது அவர் கொண்டிருந்த ஆழமான பற்றை வெளிப்படுத்துகிறது. தேசப்பற்று மிக்க பாடல்களால் தேசியக் கவியாகப் போற்றப்படும் பாரதியார், இந்திய விடுதலை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார்.
கண்ணன் என் சேவகன் – பாரதியார்
பாரதியார் சேவகரால் பட்ட சிரமங்களைக் கூறுக :
சேவகர்கள் சிறிய செயலைச் செய்தாலும் மிகுதியான கூலியைக் கேட்பார்கள்;
நாம் முன்பு கொடுத்தவற்றையெல்லாம் மறப்பார்கள்;
நம் வீட்டில் வேலை மிகுதியாக இருக்கும் என்று தெரிந்தால், அன்றைக்கு வேலைக்கு வராமல் தம் வீட்டிலேயே தங்கிவிடுவார்கள்;
மறுநாள் அவர்களிடம் ஏன் நேற்று வேலைக்கு வரவில்லை’ என்று கேட்டால் பல்வேறு சாக்குப் போக்குகள் சொல்வார்கள்;
பானையில் இருந்த தேள் பல்லால் கடித்தது என்பர்;
வீட்டில் உள்ள பெண்டாட்டியின் மேல் பூதம் வந்தது என்பர்;
பாட்டியார் இறந்த பன்னிரண்டாம் நாள் என்பர்;
இவ்வாறு இடைவிடாமல் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லுவார்கள்; நாம் ஒன்றைச் செய்யச் சொன்னால் வேறு ஒன்றைச் செய்வார்கள்;
நமக்கு வேண்டாத பங்காளிகளோடு தனியிடத்தில் மறைவாக இருந்து பேசுவார்கள்;
நம் வீட்டுக்குள் இருக்க வேண்டிய மறைவுச்செய்திகளைப் பலரும் அறியச் சொல்லுவார்கள்;
எள் முதலிய சிறு பொருள் நம் வீட்டில் இல்லை யென்றாலும், அவ்வில்லாமையை எல்லார்க்கும் வெளிப்படுத்துவார்கள்.
இவ்வாறு வேலைக்காரர்களால் படும் துன்பங்கள் பல உண்டு: எனினும், வேலைக்காரர்கள் இல்லாவிட்டாலோ நமக்கு வேலைகள் நடப்பதில்லை.
என்று பாரதியார் சேவகரால் பட்ட சிரமங்களை எடுத்துரைக்கிறார்.
சேவகனாக வந்த கண்ணன் தான் என்னென்ன செய்வதாகக் கூறினான்?
சேவகர்களால் பாரதியார் துன்பம் அடைந்து வருந்தும் போது, ஒருவன் எங்கிருந்தோ வந்தான்; பாரதியை நோக்கி, “ஐயா, நான் இடைச் சாதியைச் சேர்ந்தவன்;
மாடு கன்றுகள் மேய்ப்பேன்; மக்களைக் காப்பேன்;
வீட்டைப் பெருக்கி விளக்கேற்றுவேன்;
நீங்கள் ஏவியபடி செயல் புரிவேன்;
துணிமணிகளைக் காப்பேன்;
குழந்தைகளுக்கு இசையும் கூத்தும் நிகழ்த்தி, அவர்கள் அழாதபடிப் பார்த்துக் கொள்வேன்;
என் உடல் வருத்தத்தைப் பாராமல், இரவும் பகலும் காட்டுவழியிலும் கள்ளர் கூட்டத்து நடுவிலும் தங்களுக்குத் துணையாக வருவேன்;
தங்களுக்கு ஒரு துன்பமும் வராதபடிக் காப்பேன்;
நான் கல்வியேதும் கல்லாதவன் காட்டு மனிதன்,
என்றாலும், சிலம்பு வித்தை, குத்துச் சண்டை, மற்போர் ஆகியவற்றை நான் அறிவேன்;
உங்களுக்குச் சற்றும் துரோகம் செய்ய மாட்டேன்” என்று பலவாறு கூறினான்.
கண்ணனுக்கும் பாரதியாருக்கும் நிகழ்ந்த உரையாடலை வரைக
சேவகர்கள் சிறிய வேலையைச் செய்தாலும் அதிகமான கூலியைக்கேட்பார்கள்; முன்பு கொடுத்தவற்றையெல்லாம் மறப்பார்கள்; இல்லத்தில் வேலை அதிகமாக இருக்கும் எனத் தெரிந்தால், அன்றைக்கு வேலைக்கு வரமாட்டார்கள்; எப்படியாவது வேலையை மற்றவர்கள் முடித்த பிறகு, வேலைக்கு வருவார்கள்; ‘ஏனடா நேற்று வரவில்லை’ என்றால், பல்வேறு சாக்குப் போக்குகள் சொல்வார்கள்; பானையில் இருந்ததேள் பல்லால் கடித்ததென்றோ, பெண்டாட்டிமேல் பூதம் வந்ததென்றோ, தம் பாட்டியார் இறந்த பன்னிரண்டாம் நாள் என்றோ பல வகையாகப் பொய் சொல்லுவார்கள்; நாம் ஒன்று சொன்னால் தாம் வேறு செய்வார்கள்; நமக்கு வேண்டாத பங்காளிகளோடு, தனியே இரகசியம் பேசுவார்கள்; நம் வீட்டுக்குள் இருக்கவேண்டிய செய்திகளை ஊர்மக்கள் பலரும் அறியுமாறு சொல்வார்கள்; நம் இல்லத்தில் என் முதலான சிறிய பொருள் இல்லையென்றாலும் அதை எல்லோருக்கும் வெளிப்படுத்துவார்கள்; இங்ஙனம் வேலைக்காரர்களால் வரும் துன்பம் மிகுதியாக உண்டு. என்றாலும், வேலைக்காரர் இல்லாமல் நம்மால் வீட்டு வேலைகளை நடத்தவும் முடிவதில்லை.
இப்படி நான் துன்பமுற்று வாடுகையில் ஒருவன் எங்கிருந்தோ வந்தான். அவன் என்னை நோக்கி, “ஐயா, நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன்; மாடு கன்றுகளை மேய்ப்பேன்; மக்களைக் காப்பேன்; வீட்டைப் பெருக்கி விளக்கேற்றுவேன்; நீங்கள் இடும் தொழிலைச் செய்வேன்; துணி மணிகளைக் காப்பேன்; ஆட்டமும் பாட்டும் நிகழ்த்திக் குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்வேன்; என் உடல் வருத்தத்தையும் பாராமல் இரவும் பகலும் தங்களோடு காட்டு வழியிலும், கள்வர் கூட்டத்து நடுவிலும் தங்களுக்குத் துணையாக வருவேன்; தங்களுக்கு ஒரு துன்பமும் நோராமற் காப்பேன்; நான் கல்வியேதும் கல்லாதவன்; காட்டு மனிதன்; என்றாலும் சிலம்பவித்தை, குத்துச் சண்டை மற்போர் ஆகியன அறிவேன்; தங்களுக்குச் சற்றும் நயவஞ்சனை செய்யமாட்டேன்” என்றெல்லாம் கூறினான்.
“உன் பெயரென்ன ?” என்று நான் வினவியபோது அவன், “பெயர் என ஒன்று தனியே எனக்கு இல்லை; ஊரிலுள்ள மக்கள் என்னைக் கண்ணன் என்று அழைப்பர்” என விடை கூறினான்;
அவனுடைய தோற்றம், குணம், சொல் ஆகியவற்றை நான் கவனித்து, ‘இவனே நமக்குத் தக்கவன்’ என்று மனத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் “மிகுதியான சொற்களால் பெருமைகள் பல பேசுகின்றாய்; நீ விரும்பும் கூலி என்ன?’ என்று நான் வினவினேன்.
“ஐயனே, நான் ஒரு தனியாள்; எனக்கு மனைவியும் மக்களும் இல்லை; நரையும் திரையும் தோன்றாவிட்டாலும், எனக்கு ஆன வயதுக்கு அளவில்லை; நீங்கள் என்னை அன்போடு ஆதரித்தால் அதுவே எனக்குப் போதும்; உங்கள் நெஞ்சிலுள்ள அன்புதான் எனக்குப் பெரியது; காசு பெரிதல்ல” என்று அவன் விடை கூறினான்.
‘பழங்காலத்தைச் சேர்ந்த கள்ளங்கபடமற்ற ஆள் இவன்’ என நான் உணர்ந்துகொண்டேன்; மிக்க மகிழ்ச்சியோடு அவனை ஏற்றுக் கொண்டேன். இவ்வாறு கண்ணனுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடலை பாரதியார் எடுத்துரைக்கிறார்.
கண்ணன் பாரதியார் வீட்டிற் செய்த வேலைகளைத் தொகுத்துக் கூறுக.
பழங்காலத்தைச் சேர்ந்த கள்ளங் கபடமற்ற ஆள் இவன்’ என நான் உணர்ந்து கொண்டேன்; மிக்க மகிழ்ச்சியோடு அவனை ஏற்றுக் கொண்டேன்; அன்று முதல் அவனுக்கு நம்மிடம் அன்பு அதிகமாகி வருதலை நான் காண்கிறேன். அவனால் நான் பெறும் நன்மைகளையும் அளவிட்டுச் சொல்ல முடியாது. கண்ணை இமைகள் காப்பதுபோல் என் குடும்பத்தை அவன் அழகாகக் காக்கின்றான்; ஆயினும் அவனிடம் வாய்முணுத்தல் இல்லை. தெருக்கூட்டுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், பிற வேலைக்காரிகள் செய்யும் குற்றங்களை அதட்டி அடக்குதல் ஆகியவற்றைச் செய்கின்றான்; பிள்ளைகளுக்கு ஆசிரியனும், செவிலித்தாயும், மருத்துவனும் ஆக விளங்குகின்றான்; குறைவில்லாமல் பொருளைச் சேர்க்கின்றான்; பால், மோர் முதலியன வாங்குகின்றான்; குடும்பத்துப் பெண்களைத் தாய்போல் அன்புடன் காக்கின்றான்; எனக்கு நண்பனாகவும், அமைச்சனாகவும், ஆசிரியனாகவும் இருக்கின்றான்; பண்பிலே தெய்வமாய் இருந்தாலும் பார்வைக்குச் சேவகனாய் விளங்குகின்றான். இவனை வேலைக்காரனாகப் பெற நான் மிக்க தவம் செய்திருக்க வேண்டும்.
என் வீட்டில் இவன் அடியெடுத்து வைத்தநாள் முதலாக எனக்குச் சிந்தனையோ கவலையோ எதுவுமில்லை; எல்லாம் அவன் பொறுப்பே, செல்வம், பெருமை, அழகு, சிறப்பு, புகழ், கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், சிவஞானம் முதலான பல்வேறு நன்மைகளும் என் இல்லத்தில் நிறைந்து வருகின்றன. எனவே, கண்ணனை என் சேவகனாகக் கொண்டதனால், ஊனக் கண்ணையும் ஞானக் கண்ணையும் பெற்றவனாகவே என்னை நான் கருதுகின்றேன்.
இவ்வாறு கண்ணனைச் சேவகனாகப் பெற்ற பாரதியார், மனம் நெகிழ்ந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கூறுகின்றார்.
பாரதியாருக்கும் கண்ணனுக்கும் நிகழ்ந்த உரையாடலில் பொதிந்துள்ள உட்கருத்துகள் யாவை?
கண்ணன் பாரதியிடம் கூறுகின்ற சொற்கள், வேலைக் காரனுடைய சொற்களாகத் தோன்றினாலும், சிற்சில இடங்களில் அவன் தெய்வமே என்பதைத் தொனிப்பொருளாக இருந்து உணர்த்துகின்றன. ‘எங்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான்’ என்று வேலைக்காரனாக வந்த கண்ணன் கூறுவதிலிருந்து, இறைவனுக்குத் தனியான இடம் ஒன்றில்லை; அவன் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவன் என்பதை உணர்த்துகிறது. ஆயர்பாடியில் வளர்ந்ததைக் காட்டுகிறது. இடையர் குலத்தில் கண்ணன் ‘கற்றவித்தை ஏதுமில்லை’ என அவன் கூறுவது, தான் கல்வியறிவில்லாதவன் என்ற வெளிப்பொருளைச் சுட்டுவது ஆயினும், இறைவன் மற்றொருவரிடம் சென்று கல்வி கல்லாதவன்; இயல்பாகவே முற்றிவுடையவன்’ என்ற உட்பொருளும் அத்தொடரில் அமைந்துள்ளது. பெயரைச் சொல்லுமாறு வேலைக்காரனாக வந்தவனிடம் பாரதியார் கேட்ட பொழுது, தனியே ஒரு பெயரும் தனக்கு இல்லையென்றும் ஊர் மக்கள் தன்னைக் கண்ணன் என அழைப்பர் என்று அவன் விடை கூறுகின்றான். இறைவனுக்குத் தனியே பெயரும் வடிவமும் இல்லை என்கின்ற சித்தாந்த உண்மை இங்கே குறிப்பாகச் சுட்டப்படுகிறது.
இங்ஙனமே பின்னும், தாலிகட்டிய மனைவியும், அவள் மூலமாகத் தோன்றிய மக்களும் தனக்கு இல்லையென்றும், தான் ஒரு தனி ஆள் என்றும், தனக்கு ஆன வயதுக்கு அளவில்லையென்றும் அவன் கூறுவது இறைவனுடைய தனித்தன்மையையும் அவனுக்குத் தோற்ற வளர்ச்சிகள் இன்மையையும் காட்டுகின்றது.
‘நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை’ என்ற தொடர், ‘இறைவன் உள்ளன்பையே மதிப்பவன்; செல்வத்திற்கு மயங்காதவன்’ என்ற உண்மையைக் குறிக்கின்றது.
தம் குடும்பத்தோடு ஒன்றுபடுத்திக் கொண்டவனாகிக் கண்ணன் எல்லாப் பணிகளையும் பொறுப்போடும், உரிமையோடும் செய்தமையைப் பாரதியார் கண்டு மனம் நெகிழ்கின்றார். ‘இவன் எனக்கு வேலைக்காரனல்லன்; எங்கிருந்தோ வந்து, பணியாளன் வடிவிலே இருந்து கொண்டு என்னைக் காக்கத் தோன்றிய தெய்வம்’ என்று மனங்குழைந்து போற்றுகின்றார். அதற்கு ஏற்றாற்போல் அவரில்லத்திற்குக் கண்ணன் வந்த நாள் முதலாக அவர்க்குக் கவலை எதுவும் வராதபடி அவன் பார்த்துக்கொண்டான். செல்வம் முதலான எல்லா நலன்களும் அவரில்லத்தில் தழைத்தன. எனவே, தாம் கண்ணனைச் சேவகனாகப் பெற முற்பிறப்பில் செய்த தவம், நல்வினை, தானம் முதலியனவே காரணங்கள் ஆதல்வேண்டும் எனக் கூறுகிறார் பாரதியார்.
0 Comments