சைவ சமயத்தினரின் தமிழ்த்தொண்டு
சைவ சமயம், சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் ஒரு பழமையான இந்து சமயப் பிரிவு. இது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பரவலாக உள்ளது. சைவ சமயத்தினர் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியது. பல்லவர் காலம் முதலே சைவ சமயம் தமிழ் மொழியோடு பின்னிப் பிணைந்துள்ளது.
பன்னிரு திருமுறைகள் :
நாயன்மார்கள் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறை என்பதாகும்.
திருஞான சம்பந்தர் தேவாரம் 1 - 3ஆம் திருமுறைகள்:
திருநாவுக்கரசர் தேவாரம் 4-6ஆம் திருமுறைகள்: சுந்தரர் தேவாரம் 7ஆம் திருமுறை; மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம். திருக்கோவையார் 8ஆம் திருமுறை;. திருமாளிகைத் தேவர் முதலியோர் பாடியவை 9ஆம் திருமுறை; திருமூலர் பாடியது 10ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் முதலியோர் பாடியவை 11ஆம் திருமுறை; பெரியபுராணம் 12ஆம் திருமுறை ஆகும்.
பெரியபுராணம்
நாயன்மார்களைப் பாடிய பெருங்காப்பியம் பெரியபுராணம் ஆகும். இதன் ஆசிரியர் சேக்கிழார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டாகும். இது 63 நாயன்மார்களின் வரலாற்றைக் காப்பிய மாகப் பாடிய நூலாகும். இதில் இரண்டு காண்டங்களும், 13 சருக்கங் களும் உள்ளன. மொத்த பாடல்கள் 4281 ஆகும்.
பெரியபுராணம் 12ஆம்திருமுறையாகப் போற்றப்படுகிறது.
திருஞான சம்பந்தர்
சீர்காழி என்னும் ஊரில் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் சிவபாத இருதயர். தாயார் பெயர் பகவதியார். இளம் வயதிலேயே கவிதை பாடத் தொடங்கினார். இவரது பாடல்கள் சம்பந்தர் தேவாரம் என்றழைக்கப்படுகின்றன. இவை முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சுந்தரர்
இவர் திருநாவலூரில் அவதரித்தவர். தந்தையார் பெயர் சடையனார், தாயார் பெயர் இசைஞானியார். இவரது இயற்பெயர் நம்பியாரூரர். வன்தொண்டர், தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் பாடியவற்றுள் 1025 பாடல்களே கிடைக்கின்றன. இப்பாடல்கள் 7ஆம் திருமுறையாகத் திகழ்கின்றன.
மாணிக்கவாசகர்
இவர் திருவாதவூரில் அவதரித்தவர். இவரது இயற்பெயர் வாதவூரர் என்பதாகும். இவரது திருவாசகம் என்னும் நூல் பக்தி இலக்கியத்தில் புகழ்பெற்றதாகும். இதுதவிர திருக்கோவையார் என்னும் மற்றொரு நூலையும் எழுதியுள்ளார். இது கோவை நூல் களில் முன்னோடியாகத் திகழ்கிறது. இவரது பாடல்கள் 8ஆம் திருமுறையாகத் திகழ்கின்றன.
காரைக்கால் அம்மையார்
இவர் காரைக்காலில் வணிக மரபில் தோன்றியவர். இவரது இயற்பெயர் புனிதவதியார். சிவபெருமானைப் பற்றி மனமுருகப் பாடியவர். இவரது பாடல்கள் 11ஆம் திருமுறையாகத் திகழ்கின்றன. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருஇரட்டை மணிமாலை. அற்புதத் திருவந்தாதி ஆகியவை இவரது நூல்களாகும்.
சைவ மடங்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றும் தொண்டை எழுதுக.
சைவ மடங்கள்
தமிழ் வளர்ச்சிக்குச் சைவ மடங்கள் ஆற்றும் தொண்டு மிகப்பெரிது. தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றன.
மதுரை மடம்
இது சைவ மடங்களுள் பழமையானதாகும். திருஞான சம்பந்தர் இம்மடத்தில் தங்கியதாகச் சொல்லப்படுகிறது. எனவே. திருஞான சம்பந்தர் திருமடம் என்ற பெயரும் உண்டு.
திருவாவடுதுறை மடம்
நமச்சிவாய மூர்த்திகள் இதனை நிறுவினார். இவரது காலம் 14ஆம் நூற்றாண்டு ஆகும். நன்னூலுக்கு விளக்கம் எழுதியவர். திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் ஆகியோர் இம்மடத்தில் பயின்றவர்கள்.
தருமபுரம் மடம்
குருஞான சம்பந்த தேசிகர் இம்மடத்தை நிறுவினார். இவர் சொக்கநாத வெண்பா, சிவபோத சாரம் முதலிய நூல்களை இயற்றினார்.
மாசிலாமணி தேசிகர், வெள்ளியம்பலவாணர், படிக்காசுப் புலவர் ஆகியோர் இம்மடத்தைச் சேர்ந்தவராவர்.
திருப்பனந்தாள் காசிமடம்
இம்மடம் தில்லை நாயக சுவாமிகளால் நிறுவப்பட்டதாகும். சைவ சமய நூல்கள் பலவற்றைக் குறைந்த விலையில் வெளியிட்டுத் தொண்டாற்றி வருகிறது.
பிற மடங்கள்
குன்றக்குடி, காஞ்சிபுரம், பேரூர், மயிலம், திருப்பாதிரிப் புலியூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மடங்களும் தமிழ்ப்பணி ஆற்றுகின்றன.
சைவர்களின் தமிழ்த்தொண்டு - கட்டுரை
முன்னுரை
கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியை இருண்ட காலம் என்பர். இந்த இருண்ட காலத்தின் முடிவில் தோன்றியதே பக்தி இலக்கியங்களாகும். இந்தக் காலப் பகுதியில் சைவமும், வைணவமும் வளரத் தொடங்கின.
சைவ சமயம்
சைவ சமயம் தமிழகத்தின் பழமையான சமயங்களுள் ஒன்றாகும். சைவ சமயத்தின் வழிபடு தெய்வம் சிவன் ஆகும். இந்தச் சமயத்தை வளர்த்தவர்கள் சிவனடியார்கள் ஆவர். இவர்களை நாயன்மார்கள் என்பர். இவர்கள் 63 நாயன்மார்கள் ஆவர்.
பன்னிரு திருமுறைகள்
திருஞான சம்பந்தர் முதலியோர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தேவாரம், திருவாசகம், திருக்கோவையார். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பெரிய புராணம் ஆகியவை இதில் அடங்கும்.
திருஞான சம்பந்தர்
ஆன்மிக மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர். மிகச்சிறிய வயதிலேயே கவிதை இயற்றத் தொடங்கியவர். தலங்கள் தோறும் சென்று பாடி சைவத்தைப் பரப்பியவர். இவரது தேவாரப் பாடல்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
இவரது பாடல்களுள் 3840 பாடல்களே நமக்குக் கிடைத் துள்ளன.
திருநாவுக்கரசர்
தலங்கள் தோறும் சென்று பாடல்கள் பாடி சமயத் தொண்டு செய்தவர். இவரது பாடல்கள் 4, 5, 6ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் பாடிய பாடல்கள் 49000 என்பர். ஆனால் அவை அனைத்தும் கிடைக்கவில்லை.
சுந்தரர்
சிவபெருமானின் அருமை பெருமைகளைப் பாடல்களாய்ப் பாடியவர். 4000 பதிகங்கள் பாடினார் என்பர். ஆனால் நமக்குக் கிடைப்பவை 1025 பாடல்களே ஆகும். இவரது பாடல்கள் 7ஆம் திருமுறையாகத் திகழ்கின்றன.
மாணிக்க வாசகர்
இவரது திருவாசகம் புகழ்பெற்ற பக்தி நூலாகும். 'திருவாச கத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனச் சொல்லும் வகையில் பக்தி உணர்வு ததும்பும் நூலாகத் திகழ்கிறது. திருக் கோவையார் என்னும் மற்றொரு நூலும் இவர் இயற்றியுள்ளார். இவை இரண்டும் 8ஆம் திருமுறையில் அடங்கும்.
அருணகிரி நாதர்
முருகனைப் பற்றி மனம் உருகப் பாடியவர். இவர் பிறந்த ஊர் திருவண்ணாமலை. திருப்புகழ், கந்தர் அலங்காரம், சுந்தர் அநுபூதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் என்பவை இவரது நூல்களாகும். இவற்றுள் திருப்புகழ் தலைசிறந்த நூலாகும்.
பரஞ்சோதி முனிவர்
திருவிளையாடல் புராணம் என்ற நூலை இயற்றியவர். தமிழ். வடமொழி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். நாட்டியம், இசை, குதிரை இலக்கணம் போன்றவற்றில் அறிவுமிக்கவர்.
சைவ சமயப் புராணங்களுள் மிகவும் புகழ்பெற்றவை பெரிய புராணம், கந்தப்புராணம். இவற்றோடு திருவிளையாடல் புராணமும் அடங்கும்.
சிவப்பிரகாச சுவாமிகள்
இவர் துறைமங்கலம் சிவப்பிரகாசர் எனவும் அழைக்கப்படு கிறார். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருவெங்கைக் கோவை. திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா. திருவெங்கை அலங்காரம் முதலிய நூல்களை இயற்றியவர்.
தாயுமானவர்
தாயுமானவர் தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். திருமூலர் மரபைச் சேர்ந்தவர் என்பர்.
பக்திச் சுவை நிரம்பிய பாடல்களை இயற்றியவர். சைவ சித்தாந்த நுட்பங்களைத் தனது பாடல்களால் வெளிப்படுத்தியவர்
மெய்கண்டார்
சிவஞான போதம் என்ற நூலை இயற்றியவர். இது சைவ சித்தாந்த நூல்களில் தலைசிறந்ததாகும். இதில் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அருள் நந்தி
சிவஞான சித்தியார் என்ற நூலை இயற்றியவர். 629 பாடல் களைக் கொண்டது. 'சிவஞான சித்திக்குமேல் சாத்திரம் இல்லை' என்பது பழமொழி, இந்த நூலைப் படித்தாலே ஞானம் பெறலாம் என்பர்.
0 Comments