google-site-verification: googlef09a89005d7755ea.html இயேசுகாவியம் - கவியரசர் கண்ணதாசன்

இயேசுகாவியம் - கவியரசர் கண்ணதாசன்

 

இயேசு காவியம்

கவியரசர் கண்ணதாசன் இயற்றிய இயேசு காவியம், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் கூறும் ஒரு தற்காலத் தமிழ்க் காவியமாகும், இது கிறித்தவ சமயத்தினரின் வேதமான பைபிளைத் தழுவி எழுதப்பட்டது. 

கவியரசர் கண்ணதாசன் :

கவிஞர் கண்ணதாசன், 24-6-1927 இல் சிறுகூடல்பட்டி என்னும் ஊரில் சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதியருக்குப் பிறந்தார். அவர் 17-10-1981 இல் மறைந்தார்.

பாவேந்தர் பாரதிதாசனுக்குப் பிறகு நாடு போற்றும் கவிஞராகத் திகழ்ந்த பெருமைக்குரியவர் இவர்.

தமிழ் மக்கள் 'கவியரசு' என்று பாராட்ட, அரசவைக் கவிஞராக விளங்கி, இலக்கிய நயம் செறிந்த ஆயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களை வழங்கியவர்.

திரையிசைப் பாடல்கள் தவிர, தனிக் கவிதைகளும் காவியங்களும் இயற்றியுள்ளார்.

'கண்ணதாசன் கவிதைகள்' என்னும் தலைப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட தொகுதிகளும், 'திரையிசைப் பாடல்கள்' என்னும் தொகுப்பில் இரண்டு தொகுதிகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன. இதனைத் தவிர, தைப்பாவை, கவிதாஞ்சலி முதலான நூல்களையும் அவர் இயற்றியுள்ளார். கவிதைக்குரிய மெருகோடு உரைநடையை நேர்த்தியுடன் பயன்படுத்திய திறமையும் அவருக்கு உண்டு.

அவரது வனவாசம், அலைகள், புஷ்பமாலிகா முதலான நூல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். வரலாறு, சமூகம் பற்றிய புதினங்களையும் அவர் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் நூல் லட்சக்கணக்கில் விற்பனையாகி உள்ளது.

கடைசியாக இயற்றிய 'இயேசு காவியம்' தனிப்புகழ்க் காப்பியமாக விளங்குகிறது.

கெத்சமனே தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சி :

தருமதேவனாகிய இயேசு பெருமான் தாம் உலவும் கெத்சமனே தோட்டத்தில் செபம் செய்ய நினைத்தார். அவருடைய மூன்று சீடர்கள் - பேதுரு, செபதேயுவின் மக்கள் இருவர் - முறைப்படி அவரைப் பின்தொடர்ந்தனர். அச் சீடர்களை நோக்கி இயேசு பிரான், "நான் உள்ளிருந்து உதிரம் வடிக்கிறேன்; சாவு நேரும்போது தோன்றுகிற துன்பம் இப்பொழுது என்னைத் தொட்டு இழுக்கிறது; அறிவிற் சிறந்த நீங்கள் விழித்திருங்கள்; ஆண்டவர் முன் செபம் செய்து திரும்பி விடுவேன்" என்று கூறினார்.

பிறகு தனியாக ஓரிடத்துக்குச் சென்றார். மேகம் ஏறும் வானத்தை நோக்கினார்; மண்டியிட்டுத் தொழுதார்; அவரது நெஞ்சம் துன்பத்தில் ஆழ்ந்தது. தமது ஆழ்ந்த துன்பம் வெளிப்படுமாறு, "தந்தையே, இக்கசப்புறு பாத்திரம் என்னை விட்டு நீங்கிப் போவதாயின் உம் விருப்பப்படியே நீங்கட்டும். என் விருப்பம் இதில் ஒரு சிறிதும் இல்லை. நன்மையோ தீமையோ எதுவாயினும் உமது விருப்பப்படி - முன் விதித்த விதிப்படி - நான் குடிப்பேன்; இவை யாவும் உமது செய்கைகளே; என் செயல் ஒன்றுமில்லை" என்று கூறி செபத்தை முடித்தார். பிறகு தமது சீடர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்.

ஆனால், அன்புமிக்க சீடர்களோ தாம் சொன்னவாறு விழித்திருக்காமல், உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். இயேசு பிரான் அச்சீடர்களைப் பார்த்து, "உங்கள் கண்களில் உறக்கம் வந்ததோ? உள்ளம் கூட உறங்குவதற்குக் காரணம் என்ன? உங்கள் கண்களைக் கொண்டு கடவுளைக் காணுங்கள், கனிவு மிகுந்த செபம் செய்ய முற்படுங்கள். மங்களம் பாடுவதற்கு முன்னமே மற்ற வாத்தியங்கள் வாசிப்பது நிறுத்தப்படுமா? உங்கள் உள்ள உறுதி உடைந்தது; ஊனுடம்பு வலிமை இழந்தது" என்று கூறி மீண்டும் தனிமையாகச் சென்றார்; இறைவனை நினைந்து மண்டியிட்டுச் செபம் செய்தார்.

பின்னர் அவர் அந்தச் சீடர்களிடம் வந்தார். அப்பொழுதும் அச்சீடர்கள் உறக்கத்தில் இருந்தனர். விழித்திருங்கள் என்று சொன்ன பிறகும் விழித்திருக்காமல் உறங்குகின்ற சீடர்களை எழுப்பாமல், தூங்குமாறு விட்டு மேலும் செபம் செய்யத் தொடங்கினார். அப்போது தேவ தூதன் வானத்திலிருந்து வந்தான்; மேலிருந்தவாறே அவருக்கு ஆறுதல் கூறினான்; அவருக்கு வலிமை ஊட்டினான்.

சோர்வு இல்லாமல் இயேசு செபித்ததும் அவரது துன்ப நாடி (இரத்த நாளங்கள்) சூழ வெடித்தது; வேர்வையோடு இரத்தம் வடிந்தது; மெனியெங்கும் குருதி பாய்ந்தது. பரலோகத் தந்தையைக் குறித்துச் செய்யும் சிறந்த செபத்தில் தேவதூதரான இயேசுபிரன் இரண்டறக் கலந்தார். பிறகு போர் முகத்தே காட்டும் உறுதி போன்ற வலிமையோடு, பொன்னெழுத்தில் பொறிக்கும் சிறப்புப் பொருந்திய மொழிகளைச் சீடர்களைப் பார்த்து மொழிந்தார்.

"துன்பம் வரும் நேரம் நெருங்குகின்றது; நேரப் போவதை நீங்கள் நினைவில் வையுங்கள்; மன ஆறுதல் அடையும் இந்தத் தேவமைந்தன் பகைவரின் அடிமை போலப் பிடிபடப் போகிறான்; ஒன்று சேரும் பகைவர்களாகிய பாவிகள் வாழ, இந்தத் தேவமைந்தன் கசையடி படப் போகிறான்; நீங்களும் அதைப் பார்க்கும் சூழ்நிலை நேருமாறு இதோ அந்த வஞ்சக நண்பன் நேரில் வந்துள்ளான்" என்று இயேசு பெருமான் தமது மூன்று சீடர்களையும் பார்த்துச் சொன்னார்.

வஞ்சக நண்பன் செயல்:

இயேசுவைக் காட்டிக் கொடுக்கக் கையூட்டு (இலஞ்சம்) பெற்ற யூதாஸ் என்னும் சீடன், இயேசு இருக்கும் இடமறிந்து வந்தான். அவனோடு யூத மத குருக்களும், யூத மத வேதம் ஓதுபவர்களும், இவர்கள் திரட்டிக் கொண்டு வந்த ஆள்களும் வீரர்களும்; தடிகள், கத்திகள், அம்புகள், கை விலங்குகள் ஆகியவற்றைத் தாங்கி வந்து அங்கு குவிந்தனர். மடை திறந்த வெள்ளம் போல் வந்த பகைவர்களைப் பார்த்ததும் இயேசு அவர்களை நேர்கொண்டு நின்றார்.

வீரர்களாக இருந்தாலும் வேவு பார்க்கும் ஒற்றரைக் கொண்டுதான் வெற்றி காண்கின்றனர். பாவ ஜென்மம் என்று ஒன்று இல்லாவிடில் பக்தி மார்க்கத்திற்கு வழி ஏது? பக்தி மார்க்கம் பயனற்றதாகிவிடும் அல்லவா? இயேசு இருக்கும் இடத்தை அவரோடு சேர்ந்து இருந்த சீடனான - பாவப்பட்ட ஜென்மமான - யூதாஸ் பகைவர்களுக்குக் காட்டினான். 'கோவில் பூனை புலியைப் பிடித்திடக் கூட்டத்தோடு வந்து விழுந்தது போல' - அதாவது கோவில் பூனையாகிய யூதாஸ் புலியாகிய இயேசுவைப் பிடித்திடப் பகைவராகிய கூட்டத்தோடு வந்து வீழ்ந்தான்.

தோற்றத்தில் இயேசுவைப் போலவே மற்ற சீடர்களும் இருப்பதால், இயேசு யார் என்று பகைவர்களுக்குக் காட்டுவதற்காக, யூதாஸ் அவர்களுக்கு ஒரு சூழ்ச்சியைச் சொல்லியிருந்தான். அதன்படி, மண்டியிட்டு வணங்கியிருக்கும் இயேசுவை அவன் முத்தமிட்டுத் தலையசைப்பான்; உடனே பகைவர்கள் பாய்ந்து அவரைப் பிடித்துக் கொள்ள வேண்டும்; அது மட்டுமல்லாமல், பாக்கிப் பணத்தையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு சூழ்ச்சி வார்த்தையைக் கூறியல்லவா அவன் பகைவர் யாவரையும் அழைத்து வந்துள்ளான்?

இயேசுவின் முன்னால் யூதாஸ் மண்டியிட்டு வணங்கி, "நலமே வாழ்க குருவே" என்றான்; பகைவர்களுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுக்கத் தூது அறிந்து சொல்வது போல - இயேசு இவர்தான் என்று சொல்லுவது போல - அவரை முத்தமிட்டான். தன்னை முத்தமிட்ட அவனிடம் இயேசு பிரான், "மோதுகின்ற அன்புடைய நண்பனே! முத்தமிட்டு என்னைக் காட்டிக் கொடுப்பதற்காக அல்லவா என்மீது அன்புள்ளவன்போல என்முன் வந்து நின்றாய்? நீ வாழ வேண்டும் என்று கடவுளை நான் வேண்டுவேன்" என்று கூறினார்.

Post a Comment

0 Comments