கவிஞர் தாமரை :
கவிஞர் தாமரை அவர்கள் சமகாலத் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுள் முக்கியமானவர். பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், கவிதை மீதான ஆர்வத்தால் திரைத்துறையில் பாடலாசிரியராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "மின்னலே" திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர், அப்படத்தின் பாடல்கள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.
தாமரை அவர்களின் பாடல்கள் எளிமையான, அதே நேரத்தில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மைக்காகப் பாராட்டப்படுகின்றன. குறிப்பாக காதல், நட்பு மற்றும் வாழ்க்கை குறித்த இவரது வரிகள் பலராலும் விரும்பப்படுகின்றன. ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களை இவர் வழங்கியுள்ளார். "வசீகரா", "ஒளியிலே தெரிவது என்ன", "முன்பே வா என் அன்பே வா", "நெஞ்சுக்குள்ளே", "சட்டென்று மாறுது வானிலை" போன்ற பல பிரபலமான பாடல்கள் இவர் எழுதியவை.
திரைப்பாடல்களோடு மட்டுமல்லாமல், கவிதைகளையும் எழுதி வருகிறார். பெண்களின் உணர்வுகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்து இவரது கவிதைகள் பெரும்பாலும் பேசுகின்றன. கவிஞர் தாமரை, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் :
இவருடை பல கவிதைகள் சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகளாக அமைகின்றது. ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து குரல் கொடுத்தவர் கவிஞர் தாமரை. விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் மன நிலையை இக்கவிதை எடுத்துரைக்கிறது.
கசப்பாக இருக்கிறது அம்மா, அப்பாவையும், ஆற்றோர கிராமத்தையும் விட்டுவிட்டு நூறு மைல் கடந்து வந்து விடுதியில் தங்கிப் படிப்பது மனதிற்கு வெறுப்பைத் தந்தது. அப்படியென்ன படிப்பு? என்று தோன்றியது. விடுதி சென்ம விரோதியானது. காற்றடித்து என் பிறந்த மண்ணை அள்ளி வந்து போட்டதால் சன்னல் மட்டும் எனக்கு சிநேகிதியாயிற்று.
“என்னை வந்து அழைத்துப் போங்கள்” என்று குறைந்தது நூறு முறையாவது என் கடிதம் கண்ணீரையும், கடந்த காலத்தையும், சுமந்து போயிருக்கும். திடீரென்று என் மனதுக்குள் ஒரு கதவு திறந்தது. என் அறைக் கதவு திறந்தது போலவே அறைத் தோழியாய் (Roommate) ஒருத்தி வந்தாள். அவள் என்னைவிட வயதில் சிறியவள். அகதிகள் ஒதுக்கீட்டில் விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது. யாழ்ப்பாணத்துக் காரியாம்.
அவளுடைய இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்ச் சொட்டிய அவளின் சோகக் கதைகள்.
என்னுடைய நேற்றைய கடிதத்தைக் கண்டு அம்மா வியந்திருக்க வேண்டும். ”அம்மா நான் மிக நலம் அடிக்கடி வர வேண்டாம். அழுவதை நான் நிறுத்திவிட்டேன். அடுத்தமுறை வீட்டிற்கு வரும்போது ஒரு சிநேகிதியை அழைத்து வருவேன். முடிந்தால் அவளையும் மகளே என்று விளித்துக் கூறு என்று தன் தாயிடம் கூறுவதாக கவிதை முடிகிறது. யாழ்ப் பாணத்திலிருந்து வந்த அந்த அறைத் தோழியின் சோகக் கதையைக் கேட்டு மனதைப் பக்குவப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணின் மனநிலையை இக்கவிதை எடுத்துரைக்கிறது
0 Comments