google-site-verification: googlef09a89005d7755ea.html திருக்குறளில் மனிதம் சார்ந்த சுற்றுச்சூழல் தொடர் - 02 | நாகூர் செய்கு அப்துல் காதிர்

திருக்குறளில் மனிதம் சார்ந்த சுற்றுச்சூழல் தொடர் - 02 | நாகூர் செய்கு அப்துல் காதிர்

 


மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு:

மனிதநேயத்தால் உந்தப்பட்டு, தன் இனத்தின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் உழைத்த பெருமைக்குரியவர்களுள் தந்தை பெரியார், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், அன்னை தெரேசா போன்றவர்களின் வாழ்வியல் மனிதநேயத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவையனைத்தும் மனிதநேயத்தின் சிகரம். தமிழ்ச் சமுதாயத்தைத் தன் குடும்பமாகக் கருதி, பெண்ணுரிமைக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் சமத்துவத்திற்காகவும், சாதி, மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றின் தளைகளிலிருந்து தன் சமுதாயத்தை மீட்பதற்காகவும், தமிழர்களிடையே சுயமரியாதை சிந்தனையையும் பகுத்தறிவையும் பரப்புவதற்காகவும் தன்னலமின்றி தன் வாழ்நாள் முழுதும் போராடியவர் தந்தை பெரியார். 

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரல்லாதாரின் சம உரிமைக்காக, வெள்ளையரின் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடி, இருபத்தேழு ஆண்டுகள் சிறை சென்று, முடிவில் வெற்றிபெற்று, அந்த நாட்டில் குடியாட்சி மலரச்செய்து, தன் இனத்தவருக்குச் சம உரிமை பெற்று தந்த பெருமைக்குரியவர் நெல்சன் மண்டேலா. 

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மனித உரிமைக்காக மனிதநேயத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் போராடி வெற்றிபெற்றவர் நோபல் பரிசு பெற்ற மார்ட்டின் லூதர் கிங். 

குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமல்லாமல், அல்பேனியாவில் பிறந்து, அயர்லாந்தில் வளர்ந்து, இனம் நாடு என்ற எல்லைகளைக் கடந்து, இந்தியாவிற்கு வந்து, அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், மனிதநேயத்தோடு தன் வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய அன்னை தெரேசா அவர்களின் மனிதநேயத்தோடு கூடிய சேவை அளப்பரிய பெருமைக்குரியது.

பாண்டிய மன்னன் இளம்பெருவழுதி, இந்த உலகம் ஏன் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று ஆழ்ந்து சிந்தித்த போது அவனுள் எழுந்த சிந்தனையானது “தனக்கென்று வாழாமல் பிறருக்காக வாழும் தன்னலமற்றவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிகொண்டிருக்கிறது (புறநானூறு 182)” என்ற முடிவுக்கு வந்தான். தந்தை பெரியார், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், மற்றும் அன்னை தெரேசா போன்றவர்களின் மனிதநேயச் சிந்தனையும் செயல்பாடுகளும் பாண்டிய மன்னனின் முடிவை உறுதிப்படுத்துகின்றன.

பின்பற்ற வேண்டிய மனிதப் பண்புகள் :

“அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு 

என்புதோல் போர்த்த உடம்பு.” (குறள் - 080)

அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒவ்வொருவரும், அன்பை வளர்த்து, மக்கள் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு, அனைவரிடமும் இன்சொல்பேசி, விருந்தோம்பி, ஒழுக்கத்தோடு பழகி, பொறாமையை அகற்றி, அழுக்காறு இல்லாமல், புறங்கூறாமல், தீவினைகளை விலக்கி, ஈகை செய்து, வாய்மையே பேசி, வாழ்ந்து வந்தால் திருவள்ளுவர் திருக்குறளில் கூறும் மனிதநேயம் என்னும் தலைசிறந்த பண்பு.

முடிவுரை :

மேற்கண்டவாறு சில நல்ல மனிதர்கள் வாழ்பவர்கள் இருப்பதால் இவ்வுலகம் சீராக இயங்குகிறது மாறாக மனிதநேயம் உள்ளவர்கள் இல்லையென்றால், இவ்வுலகம் மண்ணுக்குள் மறைந்து அழிந்துவிடும் என்பதனை, 

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் 

மண்புக்கு மாய்வது மன்.” (குறள் - 996) 

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும் என்ற குறளில் கூறி, மனிதத்தின் சிறப்பையும் அதன் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறார். மனிதத்தால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதில் பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் கருத்தும் வள்ளுவர் கருத்தும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

 நாகூர் செய்கு அப்துல் காதிர் 

Published in Nagore Puranam April month magazine 2025

Post a Comment

0 Comments