1970ஆம் ஆண்டுகளில் நான் நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகத்தில் தந்தி பிரிவில் பணியாற்றினேன்.
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தந்தி இயங்கும் இந்த வேலை நேரத்தில் தந்தி பிரிவில் காலை ஆறு மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு தந்தி எழுத்தரும், மாலை 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு தந்தி எழுத்தரும் தந்தி பதிவு செய்ய அனுப்ப வரும் தந்தியைப் பட்டுவாடாவிற்கு அனுப்பும் பணிகளைச் செய்ய வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தந்தியைப் பதிவு செய்ய, வரும் தந்திகளைப் பட்டுவாடா பணிகளை செய்ய மற்றொரு எழுத்தர் பணிபுரிவார்.
காலை 6 மணி முதல் 10 வரை மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையும் இரு பணிகளையும் ஒருவரே செய்ய வேண்டும்.
இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தந்தி கற்ற தந்தி பிரிவிலும், அஞ்சலக பிரிவுகளிலும் பணியாற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் இரவு தந்தி பணி புரிய வேண்டும்.
இதற்கு ஒரு தந்திக்கு பதிவு செய்து அனுப்ப பெற்ற தந்தியைப் பட்டுவாடாவிற்கு அனுப்ப ஒரு ரூபாய் தரப்படும். இந்த ஒரு ரூபாயும் தந்தி பதிவு செய்யும் பொழுது பொதுமக்களிடம் தந்தி கட்டணத்துடன் வசூலிக்கப்படும்.
மாதம் முடிந்ததும் தந்தி பிரிவில் இருப்போர் இந்த கூடுதல் பணிக்குரிய கூடுதல் தொகை பெற ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும். இரு நகல்களுடன் தயார் செய்ய வேண்டும். ஒரு நகலை தந்தி பிரிவில் வைத்துக் கொண்டு, அசலையும், ஒரு நகலையும் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். கோட்ட அலுவலகத்தில் மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அதைப் பரிசீலனை செய்து பட்டுவாடா செய்ய கோட்ட கண்காணிப்பாளர் ஆணையுடன் அனுப்புவார்கள்.
நான் ஒரு நாள் மாலை இரண்டு மணியில் இருந்து இரவு 9 மணி வரை பணிமுடித்து அதிகபட்ச இரவுப் பணியை தொடர்ந்தேன். இரவு பணியில் விழித்திருக்க வேண்டாம் பதிவு செய்ய பொதுமக்கள் ஜன்னலில் அழைத்தால் எழுந்து பதிவு செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறே தந்தியில் அழைத்தாலும் எழுந்து வரும் தந்தியைப் பெற்று பட்டுவாடாவிற்கு அனுப்ப வேண்டும்.
அய்யா! அய்யா! என்று அழைக்கும் குரல் கேட்டு விழித்துப் பார்த்தேன். ஒரு பெரும் கூட்டம் சன்னலில் நின்றது.
எழுந்து முகம் கழுவி வந்து தந்தியையும் நானே எழுதி நின்ற கூட்டத்தில் ஒருவரிடம் தந்தி படிவத்தில் கையெழுத்து வாங்கி கணக்கிட்டு சாவு தந்திக்குச் சாதாரண கட்டணம். இரு மடங்கு துரித வேகத்தில் டபுள் எக்ஸ்பிரஸில் செல்லும்.
மொத்தம் எழுபது ரூபாய்க்கு மேல் ஏறத்தாழ 20 பேர் நின்றனர். ஒருவரிடமும் பணம் இல்லை.
அந்தக் கூட்டத்தில் ஒருவர் முன்வந்து நான் கோவிந்தசாமி நாட்டார் அக்கரைப்பேட்டை பஞ்சாயத்து தலைவர். நாளை பணம் கொண்டு வந்து தருகிறேன் தந்திகளை அனுப்பு சார் என்றார் நான் ரசீது போட முயன்றேன்.
ரசீது அப்புறம் போட்டு வை! பணம் கொடுத்து விட்டு ரசீது வாங்கிக் கொள்கிறேன் என்றார்
நான் தந்தியை அனுப்பிவிட்டு பார்க்கிறேன் அத்தனை பேரும் சென்று விட்டார்கள் நான் தந்திக்குரிய ரசீது போட்டு என் சொந்தப் பணத்திலிருந்து பணம் செலுத்துவிட்டு படுத்து விட்டேன்.
மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டேன்.
மறுநாள் இரவு தகனம் முடித்துவிட்டு அந்த பஞ்சாயத்து தலைவரும் ஓரிருவரும் பணம் கொடுக்க வந்துள்ளனர். நான் எப்பொழுது வருவேன் என்று தெரிந்து கொண்டு மூன்றாவது நாள் இரவு வந்து பணம் கொடுத்து நன்றி நவின்று ரசீதைப் பெற்றுச் சென்றார்கள்.
நான் பணி ஓய்வு பெற்ற பிறகும் அந்தக் கூட்டத்தில் ஒருவரோ இருவரோ பலரோ என்னைச் சந்திக்கும் போதெல்லாம் சார் நல்லா இருக்கியா காசு வாங்காம தங்கி குடுத்தியே என்று என்னை விசாரிப்பார்கள் .
என் பணியைப் பாராட்டி உயர் அதிகாரிகளிடம் மடலும் சான்றிதழ்களும் பெற்று இருக்கிறேன். அவற்றில் எல்லாம் கிடைக்காத மகிழ்ச்சியும் மன நிறைவும் இவர்கள் விசாரிக்கும் பொழுது கிடைக்கும்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்
Published in Nagore Puranam April month magazine 2025
0 Comments