இசுலாமியச் சமயத்தினரின் தமிழ்த்தொண்டு
தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமயத்தினர், தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்;
உமறுப் புலவரின் சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மிகச் சிறந்த காவியமாகத் திகழ்வதுடன், திருநெறி விளக்கம், முகைதீன் மாலை போன்ற பல ஆன்மீக இலக்கியங்களும், சாயபு மரைக்காயர் பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களும் அவர்களின் இலக்கியப் பங்களிப்பை பறைசாற்றுகின்றன;
தமிழ் இசை மரபில் கலந்துள்ள இஸ்லாமியப் பாடல்கள் மற்றும் இசை வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை;
இஸ்லாமிய அமைப்புகள் பல கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்விக்கு ஊக்கமளித்து வருவதுடன், அவர்களின் இலக்கியங்களில் காணப்படும் எளிய நேரடித் தமிழ் நடை மற்றும் அரபு, பாரசீகச் சொற்களின் கலப்பு தமிழ் மொழிக்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது;
தமிழ் சமூகத்தின் அங்கமாக இணைந்து பல சமய நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர்கள், பழைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை பதிப்பித்து ஆய்வு செய்வதன் மூலம் மறைந்து போன இலக்கியச் செல்வங்களை வெளிக்கொணர்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வருகின்றனர்.
(1) அந்தாதி - குறிப்பு வரைக.
அந்தாதிக்குரிய இலக்கணத்துடன் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் நூல்களை இயற்றி உள்ளனர். இந்த வகையில் 13 அந்தாதி நூல்கள் காணப்படுகின்றன.
இவை இஸ்லாமியச் சமயச் சான்றோர்களையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் சிறப்பித்துப் பாடுகின்றன.
எடுத்துக்காட்டாக மதீனத்து அந்தாதி, நாகை அந்தாதி, திருமக்கா திரிபு அந்தாதி, காரை அந்தாதி ஆகியன அடங்கும்.
(2) உலா இலக்கிய வகையை முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் ஏன் இயற்றவில்லை?
உலா வரும் தலைவன் மீது ஏழு பருவங்களைச் சேர்ந்த பெண்கள் காதல் கொள்வர். இது உலா இலக்கியத்திற்கு உரிய இலக்கணம் ஆகும். ஏழு பருவப் பெண்கள் ஒருவன் மீது காதல் கொள்வது இஸ்லாமிய நெறிக்குப் பொருந்தவில்லை. எனவே. முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் இந்த இலக்கிய வகையை இயற்ற வில்லை என்பர்.
(3) படைப்போர் விளக்கம் தருக.
பரணி என்பது தமிழ்நாட்டுப் போர்க்கள நிகழ்ச்சிகளைப் பாடுவதாகும். படைப்போர் என்பது அறபு நாட்டுப் போர்களைத் தமிழில் பாடுவதாகும். படைப்போர் இலக்கியம் பரணியைப் போன்று இருந்தாலும் சிறுசிறு மாற்றங்களைப் பெற்றிருக்கும். இவ்வகையில் சக்கூன் படைப்போர், இபுணியன் படைப்போர், உச்சிப் படைப்போர், வடோச்சி படைப்போர் முதலியன படைப்போர் நூல்கள் ஆகும்.
(4) கோவை இலக்கியம் குறிப்பெழுதுக.
கோவை இலக்கியம் அகப்பொருள் இலக்கணம் கொண்ட தாகும். இத்தகைய இலக்கியத்தையும் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் பாடியுள்ளனர்.
திருமக்காக் கோவை, நாகைக் கோவை, விஜயன் அப்துல் ரகுமான் அகப்பொருள் பல்துறைக் கோவை, சம்சுத்தாசின் கோவை முதலியவை இதில் அடங்கும்.
(5) தூது - விளக்கம் தருக.
உயிருள்ள பொருளையோ உயிரற்ற பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம் ஆகும்.
முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் தூது இலக்கியத்தைக் குறைவாகவே பாடியுள்ளனர். இவற்றுள் அன்னம் விடுதூது, வண்டு விடுதூது மெய்ஞ்ஞானத் தூது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
(6) பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறித்து எழுதுக.
பாட்டுடைத் தலைவரைப் பிள்ளையாகக் கருதிப் பாடுவது பிள்ளைத் தமிழ் இலக்கியமாகும். இவ்வகையில், முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பெருமளவில் இயற்றி யுள்ளனர்.
நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், ஆயிஷா நாயகி பிள்ளைத் தமிழ், ஞானப் பிள்ளைத்தமிழ் முதலியவை பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.
(7) சதகம் என்றால் என்ன? விளக்குக.
சதம் என்றால் நூறு என்று பொருள். சதகம் என்றால் நூறு பாடல்கள் என்று பொருள்படும்.
முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் சதக இலக்கியத்தைப் பெருமளவில் பாடியுள்ளனர்.
மெய்ஞ்ஞான சதகம், திரு முகம்மது நபி சதகம், முகையித்தீன் சதகம், பூரண சதகம், பேரின்ப சதகம் முதலியவை சதக இலக்கி யங்கள் ஆகும்.
(8) மஸ்அலா - குறிப்புத் தருக.
முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் அறிமுகப்படுத்திய இலக்கியங் களுள் மஸ்அலா இலக்கியமும் அடங்கும். இதனை மசலா என்றும் எழுதுவர்.
மஸ்அலா என்பது அறபுச் சொல்லாகும். இதன் பொருள் கேள்வி, புதிர், பிரச்சனை என்பனவாகும்.
அதாவது ஒருவர் கேள்வி கேட்க இன்னொருவர் பதில் சொல்வது போன்று அமைந்திருக்கும்.
ஆயிரம் மசலா, நூறு மசலா, வெள்ளாட்டி மசலா முதலியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
(9) நாமா - விளக்கம் தருக.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் அறிமுகப்படுத்திய இலக்கிய வகையில் இதுவும் ஒன்று. நாமா என்பது பாரசீகச் சொல்லாகும். இதன் பொருள் கதை, வரலாறு என்பனவாகும். இந்த வகையில் இஸ்லா மியப் பெரியோர்களின் வரலாற்றைப் பாடுவதே நாமா எனப்படும்.
அலி நாமா, நூறு நாமா. இபுலீசு நாமா ஆகியன இதில் அடங்கும்.
(10) கிஸ்ஸா - விளக்கம் தருக.
முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் அறிமுகப்படுத்திய இலக்கிய வகைகளில் இதுவும் ஒன்றாகும்.
கிஸ்ஸா என்பது அறபுச் சொல்லாகும். இதன் பொருள் கதை என்பதாகும்.
இஸ்லாமியப் போதனையை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்ட கதை இலக்கியம் எனலாம்.
யூசுப் நபி கிஸ்ஸா, சைத்தூன் கிஸ்ஸா முதலியன இதில் அடங்கும்.
(11) இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் குறித்து விளக்குக.
முஸ்லிம் புலவர்கள் தங்கள் சமயச் சான்றோர்களின் வரலாறு களைக் காப்பியங்களாகப் பாடிக் கன்னித்தமிழ் வளர்த்தனர். புராணங்கள். கலம்பகங்கள், அந்தாதி, பிள்ளைத்தமிழ் போன்ற பலவகை இலக்கியப் படைப்புகளைப் படைத்துள்ளனர். அம்மானை, சிந்து, கோவை, ஞானப்பாடல்கள் ஆகியவற்றையும் தமிழ் மொழியில் இயற்றியுள்ளனர்; நாடகங்களையும் செய்துள்ளனர்.
உமறுபுலவர்
சீறாப்புராணத்தைப் பாடிப் பெருமை பெற்றவர். இந்நூல் நபிநாயகத்தின் வரலாற்றைக் கூறுகின்றது. இப்புராணம் காண்டங் களாகவும், படலங்களாகவும் வகுக்கப்பட்டு 5028 பாடல்களுடன் திகழ்கிறது.
குணங்குடி மஸ்தான் சாகிபு
இவருடைய பாடல்களைத் தமிழுலகம் நன்கு பாராட்டுகிறது. காயல்பட்டினத்தில் பிறந்து சென்னை இராயபுரத்தில் வாழ்ந்த இவரது இயற்பெயர் 'சுல்தான் அப்துல் காதிறு' என்பதாகும். இவருடைய பாடல்கள் தாயுமானவர் பாடல்களைப் போன்ற சிறப்புடையவை. நந்தீசர் சதகம், அகத்தீசர் சதகம், மனோன்மணிக் கண்ணி, முகைதீன் சதகம், நிராமயக் கண்ணி முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
செய்குதம்பிப் பாவலர்
நாஞ்சில் நாட்டைச்சார்ந்த இலங்கடை என்னும் ஊரில் பிறந்தவர். பல புலவர்களிடையே இவர் அவதானம் (நினைவுக்கலை) செய்து காட்டியதால் இவர் அவதானி செய்குதம்பிப் பாவலர் எனும் பெயர் பெற்றார். நினைவுக் கலைகளைச் செய்த நூறுவகையினர் காரணத்தால் இவர் தசாவதானி எனப்பட்டார். சம்சுத்தாசீம் கோவை. நாகைக்கோவை, திருநாகூர் திரிபந்தாதி. கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் சீறாப் புராணத்திற்கு உரையும் எழுதியுள்ளார்.
வண்ணக் களஞ்சியப் புலவர்
வண்ணப் பாடல்கள் பாடுதலில் வல்லவராதலால் இவர் வண்ணக் களஞ்சியப் புலவர் எனப்பட்டார். இவரது பாடல்களில் நீதிமொழிகள் மிளிரும். இவர் பாடிய நூல்களில் முகைதீன் புராணம் என்பது சிறந்ததாகும்.
சேகனாப் புலவர்
அரபி, தமிழ், வடமொழி ஆகியவற்றில் தேர்ந்தவர். நாகை அந்தாதி, திருமணிமாலை, கோத்திரமாலை முதலிய நூல்களும், அட்டபந்தம், நாகபந்தம். கமலபந்தம் முதலிய சித்திர கவிதை களையும் பாடியிருக்கிறார்.
ஜவ்வாது புலவர்
"முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்" என்று ஒரு நூல் இயற்றியுள்ளார். இவர் சரம கவிகளையும் பாடியிருக்கிறார்.
சர்க்கரைப் புலவர்
மதீனாவின் மீது ஓர் அந்தாதி பாடியுள்ளார். நகைச்சுவைப்படப் பேசுதலிலும் பாடல் இயற்றுதலிலும் வல்லவர்.
குலாம் காதிறு நாவலர்
இவர் மும்மணிக் கோவை. நாகூர்ப் புராணம், நாகூர்க் கலம்பகம். மதுரைக் கோவை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
முகமது இபுறாகிம் சாகிப் புலவர்
நபி நாயகத்தின் வரலாற்றை வினா விடையாகப் பாடியுள்ளார்.
பிச்சை இபுறகீம் புலவர்
இலக்கணக் கோடரி எனும் சிறப்புப்பெயர் பெற்ற இவர் சீதக்காதிப் பதிகம், நாயகத் திருப்புகழ், திருமதினத்து மாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
பீர்முகம்மது சாகிபு
இப்புலவர் ஞானமணி மாலை, திருநெறி நீதம் முதலிய நூல் களைப் பாடியிருக்கிறார்.
சையது முகம்மதுப்புலவர்
மதுரகவி எனும் சிறப்புப் பெயர் தாங்கிய இப்புலவர் மகாபாரத அம்மானை, அலிநாமா, நூறு நாமா தசபுராணம் ஆகிய நூல்களைச் செய்துள்ளார்.
செவத்த மரைக்காயர்
இவர் முகம்மது நபியின் மீது மக்காக்கோவை எனும் நூலை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ், அந்தாதி, கலம்பகம், மாலை எனும் வகைகளில் பல நூல்களைப் பாடியுள்ளார்.
இவ்வாறு முஸ்லிம் புலவர்கள் எண்ணற்ற நூல்களை இயற்றித் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்துள்ளனர்.
(2) குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களைக் குறித்து எழுதுக.
குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நகருக்கு அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் தோன்றினார். தோன்றிய ஆண்டு கி.பி. 1792 ஆகும்.
இவரது இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். இவரது பெற்றோர் நயினார் முகம்மது, பாத்திமா ஆகியோர் ஆவர்.
தந்தையின் மூலம் தமிழ்ப் புலமையும் தாய்வழி நற்குடிப் பெருமையும் பெற்றவர் குணங்குடியார்.
தம்முடைய இளமையிலேயே குர்ஆன் ஓதினார். இஸ்லாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்தார். இதனால் ஆலிம் (சமயக் கல்வி அறிஞர்) என்ற பட்டம் பெற்றார்.
மெய்ஞ்ஞானம் தேடித் தம் 17 ஆம் வயதில் கீழ்க்கரை சென்றார். இதனை அடுத்து கி.பி. 1813 ஆம் ஆண்டு திரிசிரபுரம் சென்றார். அங்கே மௌல்வி ஷாம் சாகிபு என்பவரிடம் தீட்சை பெற்றார்; யோக நெறியில் ஆழ்ந்தார்.
இறைக் காதலால் கவரப்பட்ட 'மஜ்ஸீப்' (கவரப்பட்டவர்) ஆகவும், இறைக்காதல் போதையில் வெறியேறிய 'மஜ்னூன்' (காதல் பித்தன்) ஆகவும் மாறி ஞானத் தேடலில் முனைந்தார். அதன் மூலம் இறை யனூபவம் பெற்றார்.
குணங்குடியாருக்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் சீடர்களாகத் திகழ்ந்தனர். ஐயாசாமி முதலியார், திருத்தணிகை சரவணப் பெருமாள் ஆகியோர் குணங்குடியார் மீது பாடல்கள் பாடி யுள்ளனர்.
குணங்குடியாரின் பாடல்கள் பின்வரும் தலைப்புகளுள் அமைந்துள்ளன.
- குருவணக்கம்
- முகியித்தின் சதகம்
- அகத்தீசர் சதகம்
- முகம்மது நபி ஆண்டவரைச் சுக அனுபவமுறத் துதித்தல்
- குறையிரங்கி உரைத்தல்
- தவராஜ மகிமை சாற்றல்
- வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல்
- ஆனந்தக் களிப்பு
- கண்ணிகள்
- கீர்த்தனைகள்
(12) சேகனாப் புலவரின் இலக்கியப் பணிகுறித்து ஒரு கட்டுரை வரைக.
கன்னித் தமிழை வளர்த்தவர்களுள் முஸ்லிம் தமிழ்ப் புலவர் களும் அடங்குவர். இவர்களுள் செய்கு அப்துல்காதிர் நயினார் லெப்பை ஆலிம் என்பவரும் குறிப்பிடத்தக்கவர். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும் நான்குவகைக் கவிதைகள் இயற்றும் வல்லமை கொண்டவர். சேகனாப் புலவர் என்பது இவரது சுருக்கப் பெயர்; புலவர் நாயகம் என்பது இவரது சிறப்புப் பெயர் ஆகும்.
பிறப்பிடம்:
காஹிரா என்றழைக்கப்படும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் குணங்குடி மஸ்தான் சாகிபின் சமகாலத்தைச் சேர்ந்தவர். பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்து அங்கேயே மறைந்தார்.
குணங்குடி மஸ்தான் சாகிபின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந் தவர். எனவே, சென்னை இராயபுரம் தொப்ப முதலித் தெருவில் அமைந்துள்ள குணங்குடியாரின் அடக்கத் தலத்திற்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
குடும்பப் பின்னணி:
சேகனாப் புலவரின் தந்தையார் பெயர் ஹமீபு லெப்பை என்ப தாகும். இவரது பாட்டனார் பெயர் மஹ்மீது நயினார் ஆலிம் என்ப தாகும். சேகனாப் புலவரின் முன்னோர்கள் ரத்தினக் கல் வணிகத்தில் ஈடுபட்டனர். முக்கியமாகப் புலவரின் தந்தையார் இரத்தினக் கல் வணிகராகவும் வானியல் அறிஞராகவும் திகழ்ந்தார். எனவே, தம் தந்தையார் மூலம் வணிக நுட்பத்தையும் வானநூல் அறிவையும் பெற் றார்.
கல்வி:
சேகனாப் புலவர் தமது தொடக்கக் கல்வியைக் காயல்பட்டி னத்தில் மேற்கொண்டார். இதன் பின்னர், கீழக்கரை சென்று தைக்கா சாகிபு என்னும் இஸ்லாமிய மேதையிடம் கலை ஞானங்களைக் கசடறக் கற்றார். தமிழ் இலக்கிய இலக்கணத்தை பயிற்றுவந்த ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
இல்லறம்:
கல்வி முடித்துப் பிறந்த ஊருக்குத் திரும்பிய சேகனாப் புலவர் இல்லறத்தில் ஈடுபட்டார். கதீஜா என்பவரை மணந்தார்.
வணிகம்:
தம் குலத்தொழிலான கல் வணிகத்தை மேற்கொண்டாலும் சேகனாப் புலவர் புலமைத் தொழிலையே பெரிதும் விரும்பியுள்ளார். இதனால் எண்ணற்ற தமிழ்க் கவிதைகளையும் பாரகாவியங்களையும் படைத்துள்ளார்.
இயற்றிய காப்பியங்கள்:
குத்பு நாயகம், திருக்காரணப் புராணம், திருமணிமாலை, புதூ குஷ்ஷாம் ஆகியவை இவர் இயற்றிய காப்பியங்கள் ஆகும்.
(1) குத்பு நாயகம்:
இறைநேசச் செல்வரான முகைதீன் ஆண்டகையைப் பாட்டு டைத் தலைவராகக் கொண்டு இக்காப்பியம் இயற்றப்பட்டுள்ளது. ஆண்டகையின் பிறப்பு, கல்வி, தவவாழ்வு, அறப்போதம் போன் றவை இக்காப்பியத்துள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் 1341 ஆகும்.
(2) திருக்காரணப் புராணம்:
மாணிக்கப்பூரில் பிறந்து நாகூரில் அடங்கி இருக்கும் ஷாகுல் ஹமீது ஆண்டகையின் வரலாற்றைத் தீஞ்சொல் காப்பியமாக இயற்றி யுள்ளார். இதில் 56 படலங்களும் 2576 விருத்தங்களும் இடம்பெற் றுள்ளன.
(3) திருமணிமாலை:
இறைத்தூதர் இப்றாகிம் நபி அவர்களின் தியாக வரலாற்றைக் காப்பியமாகப் பாடியுள்ளார். இதில் 31 படலங்களும் 2047 விருந்தங் களும் அமைந்துள்ளன.
(4) புதூகுஷ்ஷாம்:
புத்துஷ் + ஷாம் = புத்தூஷ்ஷாம்.
புத்தூஷ் என்றால் வெற்றி என்று பொருள்.
ஷாம் என்பது இன்றைய சிரியாவைக் குறிக்கிறது. புத்தூகுஷ் ஷாம் என்றால் சிரியாவின் வெற்றி என்று பொருள்படும்.
இதில் 61 படலங்களும் 6786 விருத்தங்களும் இடம்பெற்றுள்ளன.
ii சிற்றிலக்கியம்:
(1) நாகை அந்தாதி:
நாகூர் ஆண்டகை இந்நூலின் பாட்டுடைத் தலைவர் ஆவார்.
ஆண்டகையை ஞான குருவாக ஏற்று அவரது அருளுக்காக இறைஞ்சுகின்றார். இதில் 101 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. யமகம், திரிபு, மடக்கு முதலிய சொல்லணிகளில் பாடியுள்ளார். இதற்குப் புலவரே உரையும் எழுதியுள்ளார்.
(2) மக்காக் கலம்பகம்:
முகம்மது நபி(சல்) இதன் பாட்டுடைத் தலைவர் ஆவார். இதில் 100 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன.
(3) தோத்திர மாலை:
இந்நூல் மாலை இலக்கிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் 149 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முகம்மது நபி (சல்) அவர்களின் தலைமுறை விளக்கப்பட்டுள்ளன.
(4) முனாஜாத்து:
இறைவேட்டல் என்னும் அடிப்படையைக் கொண்டது. அறுசீர், எழுசீர் விருத்தங்களில் எழுதியுள்ளார்.
(5) புகழ்ந்து இரத்தல்:
இந்நூல் முனாஜாத்துப் பாணியில் அமைந்துள்ளது. இவ்வகையில் 3 பாடல்கள் அமைந்துள்ளன.
(6) சொர்க்க நீதி:
எளிமையும் இனிமையும் மிக்க பாடல்கள் இதில் இடம்பெற் றுள்ளன. பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் கருத்துமிக்க பாடல்கள் இதில் உள்ளன.
(7) சத்துரு சங்காரம்:
இதில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
(8) ஒருபா ஒருபஃது:
றசூலுல்லா, கிலுறு நபி, முகைதீன் ஆண்டவர், நாகூர் ஆண்டவர் ஆகிய நால்வர் மீதும் தனித்தனியாக 4 ஒருபா ஒருபஃது பாடல் களைப் பாடியுள்ளார். இவை அறுசீர் விருத்தம், கட்டளைக் கலித் துறையில் அமைந்துள்ளன.
(9) தனியன்:
புலவரின் பாடல்களுள் ஒரே. ஒரு தனியன் மட்டுமே அமைந் துள்ளது. இது இரட்டை ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளது.
(10) அட்ட கவி:
தனியன் போலவே அட்டகவி ஒன்றையும் புலவர் பாடியுள்ளார்.
(11) பதிகம்:
புலவர்பிரான் இரண்டு பதிகப் பாடல்களைப் பாடியுள்ளார். ஒன்று முகைதீன் ஆண்டவரைப் பற்றியது; இன்னொன்று ககுபத் துல்லா எனப்படும் இறையில்லம் பற்றியது.
(12) பல்சந்த மாலை :
முகம்மது நபி(நல்) அவர்கள் பேரில் பாடப்பட்டுள்ளது. இதில் பத்துப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
(13) சிலேடை மாலை :
இறைநேசச் செல்வர்களான முகைதீன் ஆண்டகை, நாகூர் ஆண்டகை ஆகியோர் மீது இரு பொருள்படச் சிலேடை மாலை யைப் பாடியுள்ளார்.
(14) தனிப்பாடல்கள்:
மேற்சொன்னவை தவிர வெண்பா, அகவல்பா, கொச்சகக் கலிப்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம் ஆகிய செய்யுளில் தனிப் பாடல்களையும் பாடியுள்ளார்.
(15) சித்திர கவி:
புலவர்பிரானின் கவித்திறனைக் காட்டுவதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.
(16) இன்னிசைப் பாடல்:
இன்னிசை வண்ணம், பதம், சிந்து ஆகியவற்றைப் பாடியுள்ளார்.
(17) வண்ணங்கள்:
இசைத் தமிழுக்குப் புலவர்பிரான் வழங்கியுள்ள வண்ணங்கள் குறிப்பிடத்தக்கன. அவை கொம்பில்லா வண்ணம், சித்திர வண்ணம், மெல்லிலை வண்ணம், வண்ணக் கலை ஆகியனவாகும்.
(18) பதங்களும் சிந்தும்:
வண்ணங்களைப் போலவே 36 பதங்களும் ஒரே ஒரு சிந்தும் பாடியுள்ளார்.
(19) நிருபச் செய்யுள் :
தம்மோடு தொடர்புகொண்ட 50 பேர்களுக்கு எழுதிய செய் யுள்கள் கிடைத்துள்ளன. இவை ஒவ்வொன்றும் சிறப்புக்குரியதாக உள்ளன.
0 Comments